குடியரசு தின நிறைவு விழா நடந்தபோது இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: டெல்லியில் பதற்றம்

புதுடெல்லி: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்ற குடியரசு தின நிறைவு விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குடியரசு தினத்தையொட்டி கடந்த 26ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, குடியரசு தின விழா நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, டெல்லி விஜய் சவுக் பகுதியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். ராணுவத்தை சேர்ந்த பல்வேறு இசைக்குழுக்கள் வாத்தியங்களை இசைத்தனர்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், இங்கிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மாலை 5 மணி அளவில் சக்தி குறைந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தூதரகம் அருகில் உள்ள நடைபாதையில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாலையோரம் நின்றிருந்த 4 கார்களின் முன்பக்க கண்ணாடிகள் மட்டும் உடைந்தன.  டெல்லியின் முக்கிய பகுதியில் குண்டு சத்தம் கேட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தீவிரவாதிகளின் சதித்திட்டமா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: