×

கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் ஆன்லைன் மருந்து வணிகம் அனுமதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: மத்திய பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ‘‘கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி-சமுதாயச்  சீரழிவிற்கும் வித்திடும் என்பதால் ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும்  வகையில் சட்டமியற்றும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கச் சட்டம் கொண்டு வர மத்திய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவது கண்டனத்திற்குரியது. மருந்தாளர்கள் உள்ளிட்ட  மருந்து வணிகத்தை 2 கோடி பேருக்கும் மேல் நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில், ஆன்லைன் மருந்து வழங்கும் முறை  சமுதாய சீரழிவிற்கும்-இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்காலத்திற்கும் மிகுந்த ஆபத்து விளைவிக்கும் என இந்த வணிகத்தை நம்பியிருக்கும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எவ்வித ஆலோசனையும் இன்றி-எதேச்சதிகாரமாக சட்டமியற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்த மத்திய பாஜக அரசு துடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி-சமுதாயச் சீரழிவிற்கும் வித்திடும் என்பதால் ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டமியற்றும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்றொரு பக்கம், தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றின் போது முன்களப் பணியாளர்களாக தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய அவர்களது கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். உயிர்காக்கும் துறையினரை மத்திய, மாநில அரசுகள் போராடும் நிலைக்குத் தள்ளுவது முறையன்று. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,government ,Central BJP , MK Stalin urges BJP to abandon attempt to allow online drug trade to jeopardize livelihoods of millions
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...