×

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ புதுமையான பிரசாரம் துவக்கம் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றார்: திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

திருவண்ணாமலை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதுமையான பிரசார பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நேற்று துவங்கினார். இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மனுக்களை தந்தனர். அந்த மனுக்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தின் மூலம் ஜனவரி 29ம் தேதி(நேற்று) முதல் தமிழகத்தின் 234 தொகுதியிலும் மக்களை சந்திக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று தனது பிரசார பயணத்தை அவர் துவங்கினார். திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை, நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் அமைந்துள்ள, கலைஞர் அரங்கில் நேற்று கூட்டம் நடந்தது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் நம்பிக்கையை பெறுவது சாதாரணமானதல்ல. நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயமாக, உறுதியாக, அண்ணா மீதும், கலைஞர் மீதும் ஆணையாக அவற்றை எல்லாம் நிறைவேற்றியே தீருவேன்.

எந்த சந்தேகமும் தேவையில்லை.நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை, திருவண்ணாமலையில் இருந்து தமிழகத்தில் இருக்கிற மக்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்கிறேன். உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை, எதிர்ப்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்துள்ளீர்கள். இவை இனி என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். திமுக ஆட்சி அமைந்ததும் நூறு நாட்களில் இதற்கு தீர்வு காண்பேன். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றார் கலைஞர். நிறைவேற்றியும் காட்டினார். அவர் வழியில், இந்த ஸ்டாலினும் சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன். நான் கலைஞர் மகன். நூறு நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என வாக்குறுதி அளிக்கிறேன். 14 வயதில், கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக ஆரம்பித்து மக்கள் பணியாற்ற தொடங்கியவன் நான். கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் என் கால்படாத கிராமங்களே கிடையாது. நான் பயணம் செய்யாத நகரமே கிடையாது. அரை நூற்றாண்டு காலத்தை தமிழக மக்களுடன் கழித்தவன். அவர்களுடன் இருந்தவன், வாழ்ந்தவன்.

உங்கள் துக்கங்களில் பங்கெடுத்தவன். தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களின் கண்ணீரை துடைக்க நீளுகிற முதல் கரம் என்னுடையதுதான். முதலில் சென்று அவர்களை பார்க்கும் மனிதனும் நானாகத்தான் இருப்பேன். எங்களையெல்லாம் அப்படித்தான் கலைஞர் வளர்த்திருக்கிறார். ஒரு சம்பவம் நடந்ததும், உடனே அந்த இடத்துக்கு செல்ல வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், மக்களோடு மக்களாக இருந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிப்பதற்கு முழு காரணம் என்னை உருவாக்கிய கலைஞர்தான்.மக்களுக்கு உண்மையாக இரு என்று கலைஞர் எங்கள் ரத்தத்திலேயே ஊற்றியிருக்கிறார். நான் மேயராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், இன்றைக்கு எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், அந்த பதவியை பொறுப்பாகத்தான் கருதுகிறேன்.

எங்கே சென்றாலும், நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பயன்பெற்ற மகளிர் சுய உதவி குழுவினரை அதிகம் பார்க்க முடிகிறது. ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்ைனயில் உயர்ந்து நிற்கும் பாலங்கள். சமத்துவபுரம், வரிகள் ரத்து, குளங்களை தூர்வாரியது, ஊரக பகுதி மக்களுக்கு மின் கட்டணம் குறைப்பு, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சென்னையை சுற்றிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான தொழிற்சாலைகள் எல்லாம் இன்றைக்கும் ெநஞ்சை நிமிர்த்தி திமிரோடு சொல்கிறேன், என் பெயரை சொல்கிறது.இத்தகைய வளர்ச்சி மிகு தமிழகத்தை உருவாக்க, இப்போது நான் திட்டமிட்டிருக்கிறேன். பல்லாயிரம் கோடி செலவு செய்து தொழில் நிறுவனங்களை உருவாக்குவது என்பது ஒரு பக்கம். தமிழ்நாட்டு மக்களின் கவலையை, ஒவ்வொரு தனி மனிதனாக அதிமுக ஆட்சியில் அடைந்திருக்கிற துன்பங்களை எல்லாம், திமுக ஆட்சி அமைந்ததும் துடைக்க வேண்டும். துடைத்தே தீருவோம்.‘

கடந்த 10 ஆண்டுகளில், தமிழகம் எல்லா துறைகளிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எந்த தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் இல்லை. மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பக்கூடிய, மக்கள் கவலையை போக்கும் அரசாக, மக்கள் கனவு காணும் அரசாக, திமுக அரசு நிச்சயம் அமையும். திமுக அரசுதான் அமையபோகிறது என்ற நம்பிக்கையில் இந்த மனுக்களை அளித்துள்ளீர்கள். மனுக்களை பெட்டியில் போடவில்லை. என்னை நம்பி என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நம்பிக்கையோடு செல்லுங்கள். திமுக ஆட்சிதான் அமையும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். உங்கள் எல்லா கஷ்டமும் எனக்கு புரிகிறது. உங்கள் மனுக்களை எல்லாம் இந்த பெட்டியில் போட்டு பூட்டிவிட்டேன். இந்த சாவி என்னிடம்தான் இருக்கும். விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்று பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள், இந்த பெட்டியை நானே திறப்பேன்.மனுக்களை எல்லாம் பிரித்து, இதற்கென தனி துறை உருவாக்கப்பட்டு, கண்காணிக்க குழு அமைத்து, உங்கள் அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பேன். நான் கலைஞர் மகன். நம்பிக்கையுடன் இருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

234 தொகுதியிலும் வெற்றி உறுதி: திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேவூர் ஊராட்சி வேலூர் சாலையில், மாலை 4 மணியளவில் ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தேர்தலுக்கு பின், தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறது என்று அறிவிப்பு வரும். 234 தொகுதியிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். அப்போது, இந்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு கமிட்டி அமைத்து, மாவட்டம், நகரம், பேரூராட்சி வாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேலூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

மனு தந்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு
. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, முறையாக பதிவு செய்து, உரிய ஒப்புகை ரசீது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒப்புகை ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். இது சாதாரண ரசீது இல்ைல. முக்கியமானது. இதை வைத்து என்னிடம் கேள்வி கேட்கலாம் என்றார்.  பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் எல்லாம், பெரிய பெட்டியில் போடப்பட்டது. அந்த பெட்டியை நிகழ்ச்சி மேடையில் வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூட்டினார். அந்த சாவியை தன்னுடைய சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். அதோடு, பூட்டின் மீது சீல் வைத்தார்.பொதுமக்கள் அளித்த மனுக்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து பதவியேற்ற அடுத்த நாள் இந்த பெட்டியை நானே திறப்பேன். மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க தனியாக துறை உருவாக்கப்படும் என்றார்.



Tags : Launch ,MK Stalin ,campaign ,constituency ,public ,Thiruvannamalai , Launch of 'Stalin in your constituency' innovative campaign MK Stalin receives petitions from the public: Thousands gather in Thiruvannamalai
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...