×

மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ அடையாள சிற்பமா, தமிழை அவமதிக்கும் சின்னமா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வௌியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ அடையாளச் சின்னமாக தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ்மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இதே சென்னை கடற்கரையில், தமிழுக்கு தொண்டு ஆற்றிய திருவள்ளுவர், அவ்வையார், வீரமாமுனிவர், பாரதி, பாரதிதாசன் என தமிழ்ப் புலவர்களுக்கு சிலை அமைத்து திறந்தார். அதேபோல, கலைஞர் திருவள்ளுவருக்கு அமைத்த கோட்டம் செம்மாந்து நிற்கின்றது. நாகரிக வளர்ச்சியில் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மொழிக் கலப்புக்கு அரசு துணை போகக் கூடாது.

தமிங்கில மொழியில் எழுதக்கூடாது. தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நம் மாநிலத்தில் இப்படி தமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. ஒருபுறம் மத்திய அரசால் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு, மறுபுறம் தமிழக அரசின் மொழிச் சிதைப்பு வேதனை அளிக்கிறது. உலகத்தின் இணைப்பு மொழி தான் ஆங்கிலமே தவிர, தமிழ் மொழியுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்பதை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும். சென்னையின் அடையாளமாகத் திகழும், நம்ம சென்னை சிற்பத்தில், ‘நம்ம சென்னை’ என தமிழில் முதலிலும், அடுத்து, சென்னை-தமிழ்நாடு என ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Namma Chennai ,Marina Beach ,government ,Tamil Nadu ,Vaiko , Is 'Namma Chennai' iconic sculpture on Marina Beach or a symbol of insulting Tamil? Vaiko condemns Tamil Nadu government
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...