பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (நேற்று) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இந்த முக்கிய நாளில் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கடமையாகும். ஆனால் பல எதிர்க்கட்சிகள் முதல் நாளிலேயே ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் வகையில் பங்கேற்காமல் இருப்பது நாட்டுமக்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையாது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களின் நலன் கருதி தங்களின் கோரிக்கைகளை, வாதங்களை முறையாக பாராளுமன்றத்தில் முன்வைத்து, விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். காரணம், நாடே கொரோனா வைரஸ் பரவலால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாட்டு மக்களுக்கும், நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் - பட்ஜெட் தான் அடிப்படையானது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற தொடங்கியுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவோ, நியாயமான விவாதத்தை முன்வைக்கவோ கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பாராளுமன்ற நெறிமுறைகளை கடைபிடித்து மக்கள் நலன் காக்க வேண்டும்.

Related Stories:

>