×

விவசாயிகள் பேரணி தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக சசிதரூர் உட்பட 8 பேர் மீது வழக்கு

நொய்டா :  விவசாயிகள் பேரணி தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் தவறான தகவல்களை பதிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 8 பேர் மீது நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது, வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நவ்ரீத் சிங்(28) உயிரிழந்தார்.

‘போலீசாரின் துப்பாக்கி சூட்டில் விவசாயி நவ்ரீத் சிங் உயிரிழந்தார்’ என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதே போல் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், ஜாபர் ஆகா, மிருணாள் பாண்டே உள்ளிட்ட 8 பேர் சோஷியல் மீடியாக்களில் ‘துப்பாக்கி சூட்டில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தார்’ என்று பதிவிட்டு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால் இறந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் உடலில் துப்பாக்கி குண்டு ஏதும் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் உறுதியானது. டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று போலீசார் நேற்று உறுதி செய்தனர்.இதையடுத்து சோஷியல் மீடியாக்களில் சட்ட விரோதமாக தவறான தகவல்களை பதிவிட்டதாகவும், பரப்பியதாகவும், எம்.பி. சசிதரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட 8 பேர் மீது நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கலவரத்தின் போது உயிரிழந்த விவசாயி நவ்ரீத் சிங்கின் உடலில் துப்பாக்கி குண்டு ஏதும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான உடன், சசிதரூர் உள்ளிட்ட அனைவரும் சோஷியல் மீடியாக்களில் தாங்கள் பதிவிட்டிருந்ததை அழித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : rally , Farmers, Rally, Sachitharur
× RELATED அர்ஜெண்டினாவில்...