×

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் தமிழகத்தின் வளர்ச்சி : திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் காட்டம்

திருவண்ணாமலை:கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருவண்ணாமலையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நீங்கள் கொடுத்த மனுக்கள் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இதற்கு ரசீதும் தரப்பட்டுள்ளது. இங்கு வந்துள்ள அனைவரையும் பேச வைக்க வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் நேரம் போதுமானதாக இருக்காது. எனவே பெட்டியில் உள்ள மனுக்களில் உள்ளவர்களின் பெயர்களை அழைக்கிறேன். நீங்கள் உங்கள் கோரிக்கையை சுருக்கமாக சொல்லலாம்’ எனக்கூறி பெயர்களை அழைத்தார்.

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைகள் குறித்து பேசினர். இவர்களில் பெரும்பாலானோர், ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எவ்வித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை’ என குற்றஞ்சாட்டினர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதுதான் திமுக. மக்களின் நம்பிக்கைதான் எனது சொத்து. அண்ணா, கலைஞர் ஆகியோரின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். உங்கள் அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேற்றுவேன்.

திமுக ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளை தீர்க்கப்படும். இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்கிறேன். திருவண்ணாமலையில் இன்று பிரசாரம் தொடங்கியுள்ளேன். 14 வயதில் திருவாரூரில் போராட்டம் தொடங்கிய கலைஞர் கருணாநிதி, 95 வயது வரை தமிழுக்காக போராடியுள்ளார். தமிழகத்திற்காக பல திட்டங்களை தீட்டியவர். அவர் சொன்னதை செய்தவர். அதனால்தான் இன்று அனைவரின் மனதிலும் அவர் வாழ்கிறார். அவர் வழியில் கோபாலபுரம் வீட்டு வாசலில் இருந்து எனது பிரசாரத்தை அறிவித்து இன்று திருவண்ணாமலையில் தொடங்கியுள்ளேன்.

திமுக ஆட்சி அமைந்தும் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, இலவச கலர் டிவி, முதியோர் பென்ஷன் என பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர் கலைஞர். கடந்த 50 ஆண்டுகால ஆட்சியில் கலைஞரின் கால்படாத ஊரும் இல்லை, கிராமமும் இல்லை. கடந்த 1999ம் ஆண்டு சென்னையில் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நள்ளிரவில் ஐஜி ஒருவர் பதற்றத்துடன் கலைஞரை எழுப்பி தெரிவித்தார். உடனடியாக கலைஞர் நள்ளிரவில் ஒட்டுமொத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அவசரமாக சட்டசபைக்கு வரவழைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என அனைவரின் தொகுதிகளும் படுகேவலமாக உள்ளது. எவ்வித புதிய திட்டங்களும் செய்யப்படவில்லை. எனவே மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க தயாராக உள்ளோம். திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் எங்களிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் கொடுத்த கோரிக்கை மனு அடங்கிய பெட்டியை பூட்டி ‘சீல்’ வைக்கிறேன். இதனை திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பொறுப்பேற்றவுடன் உங்கள் கண்முன் இந்த பெட்டியை திறந்து போர்க்கால நடவடிக்கைகளை எடுப்பேன். இதற்கென தனி இலாகா அமைக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Tamil Nadu ,AIADMK ,Thiruvannamalai ,MK Stalin , மு.க.ஸ்டாலின் காட்டம்
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...