×

தெலுங்கானா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற விவகாரம் :விசாரணை குழுவுக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி :தெலுங்கானா பெண் டாக்டர் கடந்த 2019ம் ஆண்டு எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை குழுவுக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலையும் தீ வைத்து எரித்து விட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களையும் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் அதே ஆண்டு டிசம்பர் 6ம் தேதி போலீசார் சுட்டுக்கொன்றனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேற்கண்ட என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் பொதுநல மனு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்பூர்கர் தலைமையில், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ் பல்டோடா ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதைத்தொடந்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில், அதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் ஓய்வு நீதிபதி வி.எஸ்.சிர்பூர்கர் தலைமையிலான விசாரணை குழுவுக்கு மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்குவதாக உத்தரவிட்டார்.

Tags : woman doctor ,Telangana ,death ,stay ,Supreme Court , Rape, Supreme Court order
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து