×

நாகர்கோவில் மாநகரில் உருக்குலைந்த சாலைகள்,தெருக்களால் அவதி-அதிகாரிகள் மெத்தனம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தின் தலை நகராக நாகர்கோவில் திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் வழியாகவே செல்கிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களும் நாகர்கோவிலை கடந்து தான் செல்கின்றன. பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகளால் மாநகரின் முக்கிய சாலைகள் சிதலமடைந்து கிடக்கின்றன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மெல்ல, மெல்ல சீரமைக்கப்பட்டாலும் கூட, மாநகரின் முக்கிய தெருக்கள் அலங்கோலமான நிலையில்தான் உள்ளன.  ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து தெருக்களிலும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இவ்வாறு பதிக்கப்பட்ட தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டதால், கற்கள் உடைந்து கிடக்கின்றன. இன்னும் பல தெருக்களில் உடைந்து போன குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறிய வண்ணம் உள்ளன.

 மாநகராட்சிக்கு சொந்தமான பிரதான சாலை என அனைத்து சாலைகளுமே குண்டும் - குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஜல்லி, தார் கலவை, பேவர்பிளாக் என அனைத்தும் பெயர்ந்து ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது.  இது சாலையா? அல்லது மரண குழிகளா? என்று கேட்கும் அளவுக்கு பெரிய பள்ளங்களும் இந்த சாலையில் உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அதிலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. அந்த சமயத்தில் சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனினும் சாலையை சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது.

 சாலைகளில் உள்ள பள்ளங்களால் வாகனங்களில் வேகமாக வருபவர்கள் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிர் பலியாகும் நிலை உள்ளன. இதுவரை மோசமாக கிடந்த அசம்பு ரோடு, தற்போது ஓரளவு சீரமைக்கப்பட்டு இருப்பது ஆறுதலை தந்தாலும், மாநகராட்சிக்கு சொந்தமான பல சாலைகள் இன்னும் சிதலமடைந்து கிடக்கிறது. இது பற்றி ஆணையர் ஆஷா அஜித்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளித்தும் அவர் மவுனம் காத்து வருகிறார். மிக மோசமாக கிடந்த நாகர்கோவில் நாகராஜா கோயில் ரத வீதிகள் தற்போது தேரோட்டத்தையொட்டி சீரமைக்கப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ரத வீதி இன்னும் சிதிலமடைந்து கிடக்கிறது. மேடு, பள்ளங்களால் மக்கள் பெரும் அவஸ்தையை சந்திக்கிறார்கள்.
 நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வை சண்முகம் சாலையில் சாலையின் குறுக்கே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. மழை நேரத்தில் இதில் தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்களில் வேகமாக வருபவர்கள் பள்ளத்தை பார்த்ததும் திடீரென பிரேக் பிடிக்க பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. அதுவும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.  நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய ரோட்டிலும் சாலையில் திடீர் பள்ளம் உருவாகி உள்ளது.  

இதனால் பைக்கில் வருபவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். நாகர்கோவில் மாநகரில் சாலைகள் குறுகிய அளவில் உள்ளன. இந்த சாலைகளும் குண்டும், குழியுமாக கிடப்பதால், பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகள், பாதாள சாக்கடை பணிகள் அரை குறையான நிலையில் உள்ளது. இதோ முடிகிறது. அதோ முடிகிறது என கூறி பணிகளை இழுத்தடித்து வருகிறார்கள்.

அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் போராட்டத்துக்கு மேல் போராட்டம் நடத்தினாலும், மாநகர சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. நாகர்கோவிலில் மிக முக்கியமான சாலை  கே.பி. ரோடு ஆகும். சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் வரை  இந்த சாலை கிடக்கும் நிலை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. முதுகு எலும்பு உடைந்து பெரும் அவஸ்தையில் தான் இந்த சாலையை கடக்கிறார்கள்.

கோட்டார், வடசேரி, ராமன்புதூர், செட்டிக்குளம், பீச் ரோடு, இருளப்பபுரம், மறவன்குடியிருப்பு, ஆயுதப்படை ரோடு என நகரின் முக்கிய சாலைகள் எல்லாம் பழுதடைந்த நிலையில் தான் உள்ளன. பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள், நகர சாலைகளை நரக சாலைகளாக பார்த்து விட்டு செல்கிறார்கள்.

பிப்ரவதி இறுதியில் தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பது, மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

மருத்துவக்கல்லூரி சாலையில் ஆபத்து

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ளது. மருத்துவமனை நுழைவு வாயிலையொட்டி சாலையின் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இது தவிர மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள் சாலையும் பல ஆண்டுகள் போடப்படாமல் உள்ளன. தற்போதைய டீன் மற்றும் இதற்கு முன் டீனாக இருந்தவர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. மருத்துவக்கல்லூரிக்குள் சாலைகள் மோசமாக கிடப்பதால் ஆம்புலன்சில் வரும் நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மருத்துவக்கல்லூரிக்குள் முதற்கட்டமாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பது கோரிக்கை ஆகும்.

Tags : city ,roads ,Nagercoil ,streets , Nagercoil: Nagercoil is the capital of Kumari district. Most of the tourists who come to Kanyakumari are from Nagercoil
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...