×

மசினகுடியில் யானை மீது தீ வீசப்பட்ட விவகாரம் அனுமதியின்றி செயல்பட்ட 55 தங்கும் விடுதிகள் மூடல்-ஊராட்சி மன்றம் நோட்டீஸ் வழங்கியது

ஊட்டி : மசினகுடி மாவனல்லா பகுதியில் குடியிருப்பிற்கான அனுமதி பெற்று விதிமுறைகளை மீறி நடந்து வந்த 55 தங்கும் விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுக்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்கள் இயங்கி வருகின்றன. கடந்த வாரம் மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை மீது தங்கும் விடுதி உரிமையாளர்கள் தீபந்தத்தை தூக்கி வீசினர். இதில் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டு 50 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது.

இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த ரேமன்ட் டீன், பிரசாந்த் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அந்த தனியார் தங்கும் விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற்று சிலர் அங்கு தங்கும் விடுதி நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தனியார் தங்கும் விடுதிகள் விதிமுறைகளை மீறி நடத்தப்படுகிறதா? என வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மாவனல்லா பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் இருப்பதும், அவை அனைத்தும் குடியிருப்புக்களுக்கான உரிமம் பெற்று தங்கும் விடுதிகளாக செயல்படுவதும் தெரியவந்தது. அவைகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மாவனல்லா பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

அந்த தங்கும் விடுதிகளை மூட உத்தரவிடப்பட்டது. முதற்கட்டமாக குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வந்த அனைத்து தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூடும்படி மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags : Panchayat Council ,hostels , Ooty: Machinagudi has closed 55 hostels in the Mawanella area for illegally obtaining residence permits.
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு