மும்பையை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என வரலாறு தெரியாமல் பேசுகிறார் லட்சுமண் சவதி? சஞ்செய் ராவத் கண்டனம்

பல்லாரி: மும்பையை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என, கர்நாடக துணை முதல்வர் லட்சுமண் சவதி, வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மும்பையில் கன்னடம் பேசும் மக்களிடம் வந்து கேட்டால் புரியும் என, சிவசேனா எம்பி சஞ்செய் ராவத் காட்டமாக பதில் அளித்துள்ளார். கர்நாடக  எல்லைப்பகுதியில் உள்ள பெலகாவி, கார்வார் மற்றும் நிப்பாணி பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலோர் மராத்தி பேசுபவர்களாக உள்ளனர். இதனால், அந்த பகுதியை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேயான எல்லை பிரச்னை குறித்த வழக்கு ஒன்று நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த இரு மாநிலங்கள் இடையேயான எல்லைப் பிரச்னை தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘‘கர்நாடகா எல்லையில் மராத்தி பேசும் மக்கள் உள்ள பகுதியில் கர்நாடக அரசு அட்டூழியம் செய்து வருகிறது. இரு மாநிலங்கள் இடையேயான எல்லைப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பெலகாவியை கர்நாடக அரசு அதன் 2 வது தலைநகராக அறிவித்துள்ளது. அந்த நகரின் பெயரையும் மாற்றியுள்ளது.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? எனவே கர்நாடக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியை உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும்’’ என பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடக துணை முதல்வர் லட்சுமண் சவதி, ‘‘மும்பையை கர்நாடகாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும். அதுவரை, மத்திய அரசு மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது: கர்நாடக துணை முதல்வர் லட்சுமண் சவதி முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள், தங்கள் சொந்த மாநிலத்தில் மராத்தி பேசுவோர் அதிகம் வசிக்கும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என விரும்புகின்றனர். சவதி சொன்னதற்கு எந்த முக்கியத்துவமும் தரத் தேவையில்லை. மக்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அது எங்களை ஒருபோதும் பாதிக்கப்போவதில்லை. கர்நாடகா எல்லைப்பகுதியுடன் உள்ள பிரச்னையானது, மராத்தி மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

சவதி மும்பைக்கும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கும் வர வேண்டும். இங்கு வசி்க்கும் கன்னட மக்களிடம் பேச வேண்டும். அவர்கள், பெலகாவி மராத்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கர்நாடகாவின் இதர சில பகுதிகளையும் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அவர்கள் இவருக்கு கூறுவார்கள். மகாராஷ்டிராவில் கன்னட பள்ளிகள், நூலகங்கள் மற்றும் கலாசார அமைப்புகள் செயல்பட மகாராஷ்டிர அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பெலகாவியில்  சாத்தியமாகுமா? என தெரிவித்துள்ளார்.

* அப்படி என்ன பேசினார்

துணை முதல்வர் லட்சுமண்சவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மும்பையில் கர்நாடக மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் இதனால் அதை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும். இத்துடன் மும்பையை கர்நாடகவுடன் இணைக்கும் வரை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் யுனியன் பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும். நம்முடைய முதல் தொகுதி இருப்பது மும்பை-கர்நாடக பகுதியில். அதானி தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. மும்பை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மும்பையில் நம்முடைய சொத்து உள்ளது. இதனால் மும்பையை கர்நாடக பகுதி என்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையை கர்நாடகவுடன் இணைக்க வேண்டும். இது தொடர்பாக சட்டபேரவை கூட்டத்தில் முடிவு எடுக்க முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: