×

குடியரசு தினத்தில் வன்முறை துரதிருஷ்டவசமானது: கெஜ்ரிவால்

புதுடெல்லி; குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் ஒன்பதாவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, \”குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் முற்றுபெறாது. இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

எனினும், வன்முறை எந்தவகையிலும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது. பிரச்னைகள் இன்னும் முடிவுக்கு வராமல் இன்னும் அப்படியே தான் உள்ளது. எனவே, விவசாயிகளுக்க நமது ஆதரவை அமைதியான முறையில் தொடர்ந்து வழங்கிட வேண்டும்” என்றார். மேலும் அவர் பேசுகையில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த வரவுள்ள ஆறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குறிப்பாக, உபி, உத்ரகாண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், மற்றும் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்கும். பிற கட்சிகளுக்க தொலைநோக்கு பார்வை என்பது கிடையாது. அதனால் தான் அவர்கள் கடந்த காலத்தை பற்றி பேசிக்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே எதிர்காலம் பற்றிய சிந்தனை உள்ளது. 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான விஷன் ஆம் ஆத்மியிடம் உள்ளது. எனவே அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* செங்கோட்டையை சேதப்படுத்தியது மிகவும் இழிவான, தேசவிரோத செயல்
செங்கோட்டையை சேதப்படுத்தியது மிகவும் இழிவானது, தேச விரோத செயலும் கூட என்று டெல்லி போலீசார் விவசாய சங்க தலைவர் தர்சன் பாலுக்கு அளித்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பான கிராந்திகாரி கிசான் சங்க தலைவர் தர்சன் பாலுக்கு அளித்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: டெல்லி செங்கோட்டை குடியரசு தினத்தில் சேதப்படுத்தப்பட்டது மிகவும் இழிவான செயல். அதோடு தேசவிரோத செயலும் தான். எனவே இந்த வன்முறை குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் அத்தனையும் டிராக்டர் பேரணியில் மீறப்பட்டுள்ளன. விவசாய சங்க தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். இதில் ஈடுபட்டவர்கள் பெயர்களை தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

* போலீசை கொல்லுங்கள் என்று கத்தினார்கள்
டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்த போது ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த போலீஸ்காரர் சந்தீப் கூறியதாவது: நான் டெல்லி செங்கோட்டையில் காவல் பணியில் இருந்தேன். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கையில் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போலீசை கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டே அனைவரையும் தாக்கினார்கள். என்னை 10 பேர் தாக்கினார்கள். நான் தப்பி ஓடி கழிவறையில் புகுந்தேன். அங்கும் வந்து என்னை வெளியே இழுத்து வந்து மீண்டும் தாக்கினார்கள். நாங்கள் அனைவரும் பயந்து விட்டோம். அவர்கள் தாக்கியதில் நாங்கள் அனைவரும் படுகாயம் அடைந்தோம். இவ்வாறுஅவர் கூறினார்.

தற்போது அவர் திர்த்ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைமை ஏட்டு பஞ்சாப் சிங்கும் படுகாயம் அடைந்துள்ளார். அவர் கூறுகையில்,’ செங்கோட்டையை விட்டு போராட்டக்காரர்களை அகற்றும்படி உத்தரவு வந்தது. நாங்கள் அவர்களை தடுத்து நிறுத்தும்போது அவர்கள் எங்களை முற்றுகையிட்டு தாக்கத் தொடங்கினார்கள். நாங்கள் தப்பி ஓடி முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் எங்களை லத்தியாலும், கம்புகளாலும் தாக்கினார்கள். இதில் எனது மணிக்கட்டு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் நான் தரையில் மயங்கி விழுந்தேன்’ என்றார். பெண் போலீஸ் ரேகா கணவர் நரேஷ் என்பவர் கூறுகையில்,’ என் மனைவிக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளோம்.

அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். அவரால் அதிகம் பேச முடியவில்லை’ என்றார். வாசிராபாத் ஸ்டேஷன் அதிகாரி பிசி யாதவிற்கு முகம் மற்றும் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கையில் முறிவு உள்ளது. அவரது தலையில் மட்டும் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. வன்முறை குறித்து அவர் கூறுகையில்,’ செங்கோட்டையில் ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்தனர். அவர்கள் அத்துமீறி எங்கள் அனைவரையும் தாக்கினர். அவர்களை நாங்கள் அப்புறப்படுத்த நினைத்தோம். ஆனால் ஆவேசமாக லத்தி மற்றும் வாள் கொண்டு எங்களை தாக்கினார்கள்.  இதில் நான் மயங்கி விழுந்து விட்டேன். அவர்கள் விவசாயிகள் என்பதால் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை. இல்லையென்றால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும்’ என்றார்.

* டெல்லி பற்றி எரிய கெஜ்ரிவால் நினைக்கிறார்: காம்பீர் குற்றச்சாட்டு
டெல்லி விவசாயிகள் பேரணியில் வன்முறை நடந்தது குறித்து பா.ஜ எம்பி காம்பீர் தனது டிவிட்டரில் கூறியதாவது: குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த வன்முறைக்கு ஆம்ஆத்மி பொறுப்பு ஏற்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் கட்சி வளர்ச்சிக்காக கெஜ்ரிவால் இந்த வன்முறையை கண்டிக்கவில்லை. மேலும் அவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி போராட்டத்தில் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வன்முறை கும்பலை கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இதன் மூலம் அவர் டெல்லி பற்றி எரிய வேண்டும் என்று நினைப்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்

* காஜியாபாத் எல்லையில் பதற்றம்
காஜியாபாத் நிர்வாகம் சார்பில் உபி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்று நள்ளிரவுக்குள் எல்லை பகுதியை காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் வலுக்கட்டாயமாக அகற்றப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான உத்தரவை காஜியாபாத் மாவட்ட கலெக்டர் அஜய் சங்கர் பாண்டே வெளியிட்டுள்ளார். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags : Republic Day ,Kejriwal , Violence on Republic Day is unfortunate: Kejriwal
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...