×

23 லட்சம் பணம் பெற்று கொலை மிரட்டல் இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்கு பதிவு: காவலன் திரைப்பட விநியோகம் பெற்று தருவதாக மோசடி

சென்னை: திரைப்படம் விநியோகம் தொடர்பாக ₹23 லட்சம் பெற்று கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அடையாரை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கடந்த 2011ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளிவந்த காவலன் திரைப்படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யலாம் என்று பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னிடம் கூறினார். அதன் படி நான் ₹23 லட்சம் பணம் அவரிடம் கொடுத்தேன். பின்னர் அவர் காவலன் திரைப்படத்தின் விநியோகம் உரிமை பெற்று தராமல் ஏமாற்றி விட்டார். இதனால் நான் அவரிடம் கொடுத்த பணத்தை கேட்டேன். அப்போது அவர் 5 காசோலைகள் கொடுத்தார். அந்த காசோலையை நான் வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்ப வந்தது.

இதுகுறித்து நான் அவரிடம் கேட்ட போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ₹23 லட்சம் பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். ஆனால் சுந்தர் அளித்த புகாரின் படி விருகம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சுந்தர் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Tags : Shakthi Chidambaram , Police have registered a case against director Shakthi Chidambaram for threatening to kill him for Rs 23 lakh
× RELATED பணமோசடி செய்த வழக்கில் இயக்குனர்...