×

தங்கவயலில் மான் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயலில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வரும் மானினத்தை பாதுகாக்கும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தங்கவயலில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல். தொழிற்சாலைக்கு சொந்தமான காலி நிலத்தில் நீலகிரி மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகள் போல் காட்சி தரும் தோப்பில், சில ஆண்டுகளாக மான்கள் வாழ்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் ஓரிரு மான்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் பல வகை மான்கள் வசிக்கின்றன. அவற்றுக்கு போதிய இரை கிடைக்கவில்லை என்றாலும் இயற்கையாக கிடைக்கும் புல், செடிகளை உண்டு வாழ்ந்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக மைதானத்தில் மேயும் மான்களை காண கண்கோடி வேண்டும். இந்த ரம்மியான காட்சியை காண பல இடங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

இந்திய அரசால் மதிப்புமிக்க விலங்குகள் பட்டியலில் மான் சேர்க்கப்பட்டுள்ளது. உணவுக்காக மானை அடித்து சாப்பிடுபவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான்கான், மான் கறி சாப்பிட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள வரலாறு உள்ளது. இப்படி தேசிய வன விலங்குகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள மான்கள், தங்கவயலில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அழியும் நிலையில் உள்ளது. மான்கள் வாழும் பகுதியை சுற்றி காம்பவுண்டு அமைக்காமல் இருப்பதால் பங்காருபேட்டை-கிருஷ்ணாபுரம் மாவட்ட நெடுஞ்சாலை, பேத்தமங்கலம்-தங்கவயல் மாவட்ட நெடுஞ்சாலை, ராபர்ட்சன்பேட்டை-பங்காருபேட்டை மாவட்ட நெடுஞ்சாலை மற்றும் மாரிகுப்பம்-பங்காருபேட்டை இடையிலான ரயில் பாதைகளை கடக்கும்போது பஸ் மற்றும் ரயில் மோதி இறந்து விடுகிறது.

இது போதாதென்று தெருநாய்களின் கோரப்பசிக்கு தினமும் மான்கள் இரையாகி வருகிறது. மான்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி பாலகாடு, நியுமாடல் ஹவுஸ் உள்ளிட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. அங்கு வசிக்கும் தெருநாய்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக மான்கள் மேயும் மைதானத்திற்கு சென்று, அங்கு  மான்களை வேட்டையாடுகிறது. இதில் தினமும் ஓரிரு மான்கள் செத்து மடிகிறது. இப்படி நாய்களின் கோர பசிக்கு இரையாகும் மான்கள் இனத்தை காப்பாற்ற தவறினால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்கவயலில் மான்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தெரியாமல் போய்விடும். ஆகவே அழிவின் நிலையில் உள்ள மான்களை காப்பாற்ற வேண்டும். அவைகளுக்கு தேவையான தீவனம், குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும். மான்கள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்பது பிராணிகள் நல விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது. தெருநாய்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக மான்கள் மேயும்  மைதானத்திற்கு சென்று, அங்கு மான்களை வேட்டையாடுகிறது. இதில் தினமும்  ஓரிரு மான்கள் செத்து மடிகிறது

Tags : Deer park ,Goldfields , Deer park to be set up in Goldfields: Public demand
× RELATED பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில்...