×

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை படுகாயமடைந்த போலீசாரை நேரில் சந்தித்தார் அமித்ஷா

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்டவன்முறையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் போலீசாரின் உடல்நலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. போலீசார் தரப்பில் 400க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, சுஷ்ருத் சிகிச்சை மையம் மற்றும் தீரத் ராம் மருத்துவமனை இரண்டிலும் போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போலீசாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்தார். அதன்பின் போலீசாருக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் பற்றி மருத்துவர்களிடம் அமித்ஷா கேட்டறிந்தார். இதுகுறித்து ஷா பின்னர் பதிவிட்ட ட்விட்டர் தகவலில், ‘காயமடைந்த டெல்லி போலீசாரை நேரில் சந்தித்தேன். அவர்களது துணிச்சலும் தைரியமும் பாராட்டுக்குரியவை. அதனை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். மருத்துவமனைக்கு அமித்ஷாவுடன் உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் டெல்லி கமிஷனர் எஸ்என் ஶ்ரீவத்சவா இருவருடன் சென்றனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த போலீசாரை சந்தித்த உடல்நலம் விசாரித்தார். பின்னர் சிகிச்சை பெறும் போலீசாருக்கு  சிறந்த மருத்துவம் மற்றும் சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபற்றிய அவரது ட்விட்டர் பதிவில், ‘‘போலிசார் விரைவாக மீண்டு வரவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் ”என்று பதிவிட்டுள்ளார்.


Tags : policemen ,Amitsha ,tractor rally , Amitsha met policemen who were violently injured in a farmers' tractor rally
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்