×

வடக்கு டெல்லி மாநகராட்சியில் 13 ஆம்ஆத்மி கவுன்சிலர் சஸ்பெண்ட்: மேயர் ஜெய்பிரகாஷ் அதிரடி

புதுடெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் நடந்த ரகளை காரணமாக 13 ஆம்ஆத்மி கவுன்சிலர்களை 15 நாள் சஸ்பெண்ட் செய்து மேயர் ஜெய்பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். வடக்கு டெல்லி மாநகராட்சி கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பா.ஜ வசம் உள்ளது. தற்போது அங்கு மேயராக பா.ஜவை சேர்ந்த ஜெய்பிரகாஷ் உள்ளார். ஆம்ஆத்மி கட்சிக்கு அங்கு 30 கவுன்னிலர்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் அவையில் ரகளை செய்ததாக கூறி மேயர் ஜெய்பிரகாஷ், ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 30 கவுன்சிலர்களையும் 3 மாதம் சஸ்பெண்ட் செய்தார். அதன்பின் மீண்டும் அவைக்கு வந்த ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் தகராறு செய்ததாக கூறி 13 பேரை 15 நாள் சஸ்பெண்ட் செய்து மேயர் ஜெய்பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

 சம்பளம் கேட்டு வடக்கு டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் ஜனவரி முதல்வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தபிரச்னையை மாநகராட்சி கூட்டத்தில் ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் மோதல் எழுந்தது. கூச்சல், குழப்பம் நிலவியது. குறிப்பாக சுயேட்சை கவுன்சிலர் குட்டி தேவி வடக்கு டெல்லி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து அவையில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டினார். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.  

இதையடுத்து அவையில் மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கேட்டு பிரச்னை செய்த 13 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் மற்றும் அவையில் குப்பையை கொண்டு வந்து கொட்டிய சுயேட்சை கவுன்சிலர் குட்டி தேவி ஆகியோர் அடுத்த 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இதுதொடர்பான அறிவிப்பை வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,’ கடந்த மாதம் இறந்த முக்கிய பிரமுகர்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தி, அது தொடர்பான இரங்கல் செய்தியை வாசித்துக்கொண்டு இருந்த போது சில ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் அவர்களது இருக்கையில் ஏறி நின்று விவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்றும் நடக்கவில்லை. அவர்கள் துப்புரவு ஊழியர்கள் பிரச்னை மற்றும் நகர் முழுவதும் தேங்கி கிடக்கும் குப்பை பிரச்னையை எழுப்பினர். அவர்களது நடவடிக்கை அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது. அவை ஒன்றும் தெருவீதி அல்ல. எனவே அவர்களை 15 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

* ஆம்ஆத்மி கண்டனம்
13 கவுன்சிலர்கள் 15 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சிகளின் ஆம்ஆத்மி கட்சி பொறுப்பாளர் துர்கேஷ்பதக் கூறுகையில்,’ இது மிகவும் அவமானகரமான ஒன்று. பா.ஜ ஆளும் வடக்கு டெல்லி மாநகராட்சியில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடும் ேபாது ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறு’ என்றார்.

Tags : councilor ,Aam Aadmi Party ,North Delhi Corporation ,Jaiprakash Action ,Mayor , 13th Aam Aadmi Party councilor suspended in North Delhi: Mayor Jaiprakash takes action
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...