×

மாநிலங்களவை எம்பி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

மதுரை:   மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி குருவையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  சட்டமன்ற தேர்தல்களில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு என தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எஸ்சி பிரிவினருக்கு 44 தொகுதிகள், எஸ்டி பிரிவினருக்கு 2 தொகுதிகள் என மொத்தம் 46 தனித் ெதாகுதிகள் உள்ளன. ஆனால், மாநிலங்களவை எம்பிக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படுவதில்லை. இதனால், மாநிலங்களவை  உறுப்பினர் நியமனத்தில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே உள்ளது. இதுதொடர்பாக நான் அனுப்பிய மனுவை, சட்டமன்ற செயலரின் பரிசீலனைக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திடத் தேவையான வகையில் விதிகளை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரணையை பிப். 11க்கு தள்ளி வைத்தனர்.



Tags : states ,hearing , Case seeking to grant reservation in appointment of states MP: Adjournment of hearing
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்