தாய், மகனை கொன்று 17 கிலோ நகை கொள்ளையில் கைதான 3 கொள்ளையர் பற்றி திடுக் தகவல்கள்: நாகை சிறையில் அடைப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை அடகுக்கடைக்காரர் தன்ராஜ் சவுத்ரி(50) வீட்டில் புகுந்து அவரது மனைவி ஆஷா (45), மகன் அகில் (24) ஆகியோரை கொலை செய்து, 17 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது.  இதில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் (21) என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். மணிஷ் (30), ரமேஷ் (25)  மற்றும் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த கருணாராம் (40) கைதாகினர்.    விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ெகாள்ளையர் 4 பேரும் நண்பர்கள்.  மகிபால்சிங், மணிஷ் கும்பகோணத்தில் எலக்ட்ரிக் கடையிலும், ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையில் ரமேஷும் வேலை செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் கருணாராம், செருப்பு கடை நடத்துவதோடு, ராஜஸ்தானில் இருந்து தங்கத்தை வாங்கி வந்து நகை கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார். தன்ராஜூம் இதே தொழிலை செய்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் அதிகளவில் நகைகள் இருப்பது தெரியவே கொள்ளையடிக்க திட்டமிட்டு மகிபால்சிங் உட்பட 3பேரையும் காரில் ஏற்றி வந்து தன்ராஜ் வீடு அருகே இறக்கி விட்டு, சீர்காழி பைபாஸ் சாலையில் காத்திருந்தார். அவர்கள் தாய், மகனை கொலை செய்துள்ளனர். அகில் மனைவி நெகல் (20) 6 மாத கர்ப்பணியாக உள்ளார். அவரையும் கத்தியால் குத்த முயன்ற போது ஒரு கொள்ளையன், கர்ப்பிணியாக இருப்பதால் கொலை செய்ய வேண்டாம் என்று தடுத்துள்ளார். கொலை  விவரம் ெதரிந்து கருணாராம் காரை எடுத்து கொண்டு தப்பினார்.

பின்னர் கொள்ளையர்கள் தன்ராஜின் காரில் புறப்பட்டனர். தன்ராஜும் ராஜஸ்தானை சேர்ந்தவர்தான். அவர் அங்கு செல்லும்போது கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்குவாராம். அதுபோல் கருணாராமும் வசதியாக வாழ முடிவு செய்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து 3பேரையும் நேற்று காலை சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகை சிறையில் அடைத்தனர்.

லலிதா ஜூவல்லரி கொள்ளையன் கூட்டாளி?

இந்த சம்பவத்தில் கைதான கருணாராமும், திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த கும்பல் தலைவன் திருவாரூரை சேர்ந்த முருகனும் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. முருகனிடம் இருந்து திருட்டு நகைகளை கருணாராம் வாங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். சேலம் சொர்ணபுரியில் நகைக்கடை உரிமையாளர் பாஸ்யம் வீட்டில் 2019 டிசம்பரில் நடந்த 275 பவுன் தங்க, வைர நகைகள், ரூ.50 லட்சம் கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா என்றும் விசாரணை நடந்தது.

நான்கரை கிலோ நகை எங்கே?

இந்த சம்பவத்தில் 17 கிலோ தங்க நகை, ரூ.6.75 லட்சம் கொள்ளை போனதாக தன்ராஜ் தரப்பில் போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 கிலோ 408 கிராம் தங்கம், ரூ.6.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மீதி நான்கரை கிலோ தங்கம் என்னவானது என்று தெரியவில்லை. இதனிடையே என்கவுன்ட்டர் நடந்த இடத்தை நீதிபதிகள் ஜெகதீசன், அமிர்தம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

Related Stories:

>