×

கொரோனா தொற்று பரவல் மத்தியிலும் கர்நாடக அரசின் பொருளாதார நிலை சீராகவுள்ளது: ஆளுநர் வி.ஆர்.வாலா பெருமிதம்

பெங்களூரு: கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், கர்நாடக அரசின் பொருளாதார நிலை சீராக உள்ளது. மேலும் அனைத்து துறைகளின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக ஆளுநர் வி.ஆர்.வாலா பெருமிதம் தெரிவித்தார். கர்நாடக சட்ட பேரவையின் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் ஆளுநர் வி.ஆர்.வாலா உரையாற்றினார். அவரது உரையில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை என்றாலும் நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்று நெருக்கடி மத்தியிலும் அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறினார். மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிதி நிர்வாகத்தில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தி, அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதனைப்படைக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தி வருவதுடன், போதை பொருட்கள் மூலம் இளைஞர் சமூகம் சீர்கெடுவதை தவிர்க்க போதை பொருள் தடுப்பு சட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 4,066 வழக்குகள் பதிவு செய்துள்ளதுடன் ரூ.34 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி பெங்களூரு வருவோருக்கு ரூ.80 கோடி செலவில் சென்ட்ரல் கமாண்டர் சென்டர் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

காவலர் குடியிருப்பு: மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்காக வரும் 5 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு மடிவாளவில் ரூ.30 கோடி செலவில் தடயவில் ஆய்வு மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடம் நிரப்படும். மாநிலத்தில் தீயணைப்பு துறையில் காலியாக இருக்கும் 1,567 பணியிடம் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27,773 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மழையால் முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பாதிப்பு ஏற்பட்ட வீடுகள் புனரமைக்க தலா ரூ,3 லட்சம், லேசான பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பயிர் நஷ்டமடைந்த 9,22,605 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.710 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. மழையால் இடிந்து விழுந்த பள்ளி, கல்லூரி, அரசு கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை புனரமைக்க ரூ.423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் மேற்கொள்ள ரூ.1,345 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் சிக்கபள்ளாபுரா, யாதகிரி, ஹாவேரி மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் ரூ.325 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்புர்கியில் 300 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசவண்ணரின் அனுபவ மண்டபம் ரூ.600 கோடி செலவில் கட்ட முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டியதுடன் முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சொந்தமான வீடு இல்லாத ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 46,499 வீடுகள் கட்டும் பணி தொடங்கி 31,382 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அவாஸ் திட்டத்தில் ரூ.4,460 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 83,119 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் அவாஸ் திட்டத்தில் ரூ.1,300 கோடி செலவில் 19,897 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 1,818 குடிசை பகுதிகளில் 3.36 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளில் 74,574 மற்றும் ஊரக பகுதியில் 48,162 வீடுகள் கட்டி கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அரசு துறையில் முழுமையாக மின்னணு நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல் அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. அதன் முன்னோட்டமாக முதல்வர் அலுவலகம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை மின்னணு நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல திட்டங்கள் மக்களின் வீடுகளை சென்றடையும் வகையில் மக்கள் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன் திட்டங்களின் அரசு பணிகள் எளிதில் கிடைப்பதுபோல், ஊரக பகுதி மக்களுக்கும் இவ்வசதி கிடைக்க கிராம ஒன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி குறைந்த பட்சம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.53,295 கோடி செலவில் 366 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.54 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உலக வங்கி உதவியுடன் பெலகாவி, கல்புர்கி, ஹுப்பள்ளி மாநகராட்சிகளில் ரூ.2,848 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.1,602 கோடி செலவில் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.1,103 கோடி செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நிதி நிலை சீராக உள்ளது: நாடு முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இச்சூழ்நிலையிலும் கர்நாடக மாநில அரசு பொருளாதார நிலையை ஸ்திரமாக வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் வணிக வரி மூலம் ரூ.30,467 கோடியும் வரி மற்றும் கலால்துறை மூலம் ₹16,788 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த அமைப்புச்சாரா தொழிலாளர்களின் நலனுக்கு நிவாரணம், கொரோனா போராளி படையில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ₹30 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அனைவரும் தங்கள் வாத, விவாதங்களை ஆரோக்கியமான முறையில் எடுத்து கூறி மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

* மாநகர வளர்ச்சி பணிகள்
பெங்களூரு மாநகரில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்ட பணி வேகமாக நடந்து வருகிறது. வரும் 2022ம் ஆண்டு இறுதிக்குள் 75 கி.மீட்டர் சுற்றளவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். பெங்களூரு புறநகர் ரயில் சேவை திட்டம் ரூ.15,767 கோடி செலவில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பெங்களூரு மாநகருக்கு சிறப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் ரூ.8,015 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்பாட்டு பணிகள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாநகரை ஓட்டியுள்ள பகுதிகளை நகரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,060 கோடி செலவில் மழைநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Government ,Karnataka ,VR Wala ,spread , Karnataka's economy is stable despite corona outbreak: Governor VR Wala proud
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...