×

திருமண மண்டபத்தில் நகைகள் அபேஸ் 2 மணிநேரத்தில் திருடனை பிடித்த போலீசார்

குன்றத்தூர்:பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்தவர் விஜயகுமார் (61). நேற்று காலை விஜயகுமார், மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு, அவரிடம் இருந்த நகை பைகளை, ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, திருமண வேலைகளை கவனித்தார். பின்னர், அறைக்கு வந்தபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது. உள்ளே வைத்திருந்த ஏழரை சவரன் நகைகள், 2 செல்போன்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நகையை திருடி சென்ற வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்து, தீவிரமாக கண்காணிக்கும்படி தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஒருவர் சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது, திருமண மண்டபத்தில் நகைகளை கொள்ளையடித்த வாலிபர் என தெரிந்தது. உடனே, அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை, காவல் நிலையம் அழைத்து சென்று, தீவிரமாக விசாரித்தனர். அதில், பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (எ) பன்னீர்செல்வம் (23). திருமண மண்டபத்தில், நகைகளை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார். அவரிடம் இருந்து நகை, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை, கைது செய்தனர்.


Tags : Jewelry abbey ,cop , Jewelry abbey in wedding hall 2 hours thief favorite cop
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் சபலென்கா, கோகோ காப் பைனலுக்கு தகுதி