தேமுதிக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி:  கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஊராட்சி தேமுதிக செயலாளரை, கஞ்சா கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) ஸ்கெட்ச் வெங்கடேசன் (47). மாடம்பாக்கம் ஊராட்சியில் தேமுதிக ஊராட்சி செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (36). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன், மாடம்பாக்கம் அடுத்த குத்தனூரில் உள்ள டீ கடைக்கு தனது காரில் சென்றார். அங்கு டீ குடித்து விட்டு காரில் ஏற முயன்றார். அப்போது அங்கு திடீரென பைக்கில் வந்த 4 பேர், வெங்கடேசனை சுற்றி வளைத்து சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டியது. இதில், அவரது தலை, கழுத்து, கை, கால் உள்பட உடல் முழுவதும் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை கண்டதும், மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.

தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெங்கடேசனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர்கள் கூறுகையில், ‘மாடம்பாக்கத்தில் ஒரு கும்பல் கடந்த வாரம் கஞ்சா அடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வெங்கடேசன், அவர்களை தட்டி கேட்டார். மேலும், கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தில் வெங்கடேசனை தீர்த்து கட்டுவதற்காக, அவர்கள் வந்து சரமாரியாக வெட்டியதாக கூறினர். தேமுதிக பிரமுகர் வெட்டப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>