×

கர்நாடகாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் பியூசி வகுப்புகள் தொடக்கம்: 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 14 முதல் 25ம் தேதி வரை நடத்த முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் முதலாமாண்டு பியூசி கல்லூரிகள் திறக்கப்படுகிறது. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று கல்வியமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்தும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி முதல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு கல்லூரிகள், ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன் பின் ஜனவரி 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் முதலாமாண்டு பியூசி கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெங்களூரு விதானசவுதாவில் கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனை குழுவினருடன் கல்வியமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதில் டிகிரி கல்லூரி, தொழில்கல்வி கல்லூரி, மற்றும் இரண்டாமாண்டு பியூசி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை. இதனால், நிறுத்தியுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது: மாநிலம் முழுவதும் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் முதலாமாண்டு பியூசி வகுப்புகள் மற்றும் ஒன்பதாம் வகுப்புகள் தொடங்க கோவிட்-19 தகவல் தொழில்நுட்ப ஆலோசனை குழு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு, அரசு மானியம் பெறும் மற்றும் தனியார் நிர்வாகங்களுக்கு உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மற்றும் முதலாமாண்டு பியூசி வகுப்பு தொடங்கும்போது கோவிட்-19 விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பெற்றொர்களின் ஒப்புதல் கடிதம் பெறுவதும் அவசியமாகும். அதேபோல் தற்போது வித்யாகாமா திட்டத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதை முழு வகுப்பாக நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. வரும் பிப்ரவரி 2வது வாரத்தில் நிரந்தர வகுப்புகள் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

மேலும் 1 முதல் 5ம் வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாண்டு ஆரம்ப பள்ளிகள் தொடங்கலாமா? வேண்டாமா? என்பது மீண்டும் இரண்டு அல்லது மூன்று சுற்று ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் கல்வியை காட்டிலும் சிறுவர்களின் உடல் நிலை பாதுகாப்பது அவசியமாகும். மேலும் நடப்பு 2020-21ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வி இயக்குனரக ஆணையர் அன்புகுமார் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதன்படி வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு நடத்த தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் சில மாற்றங்கள் செய்து இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். மேலும் கொரோனா காலத்தில் ஊதியமில்லாமல் அவதிப்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து சிபாரிசு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : classes ,PUC ,examination ,Karnataka , Class 9 and PUC classes start from February 1 in Karnataka: Class 10 examination will be held from June 14 to 25.
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார்...