×

மொத்தம் 2,918 புள்ளிகள் வீழ்ச்சி பங்குச்சந்தையில் தொடரும் சரிவு: 9.56 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தொடர் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு கடந்த 5 நாட்களில் 9.56 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை நேற்று வர்த்த முடிவில் 536 புள்ளிகள் சரிந்து 46,874 ஆக சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த 5 நாட்களில் மட்டும் 2,918 புள்ளிகள் சரிந்து விட்டது. நேற்று மும்பை பங்குச்சந்தையில் இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி, எச்டிஎப்சி, பவர் கிரிட், இண்டஸ் இந்த் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி பங்குகள் அதிக சரிவை சந்தித்தன.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 150 புள்ளிகள் சரிந்து 13,818 புள்ளிகளாக இருந்தது.
 மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதன் காரணமாக, வங்கி, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகள் லாப நோக்கம் கருதி விற்கப்பட்டு வருகின்ன. இதுபோல், தேசிய பங்குச்சந்தையிலும் தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.  இதுமட்டுமின்றி, வெளிநாட்டு முதலீடுகள் திடீரென வெளியேற்றப்பட்டு வருவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ₹1,600 கோடிக்குமேல் இந்திய பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றி விட்டனர்.  சர்வதேச சந்தையிலும் நிலையை சாதகமாக இல்லை. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் குறைந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேற்கண்ட காரணங்களால் பங்குச்சந்தையில் சரிவுகள் தொடர்வதற்கான சூழ்நிலையே காணப்படுகிறது என முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுபோன்ற காரணங்களால் கடந்த 5 நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த மதிப்பு1,97,70,572.57 கோடியில் இருந்து, 9,56,597.82 கோடி சரிந்து நேற்று 1,88,13,974.75 கோடியாகி விட்டது. அதாவது, கடந்த 5 நாட்கள் ஏற்பட்ட தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் சுமார் 9.56 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : A total of 2,918 points fall in the stock market will continue to fall: 9.56 lakh crore loss
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...