×

இன்று முஷ்டாக் அலி அரையிறுதி தமிழ்நாடு-ராஜஸ்தான், பஞ்சாப்-பரோடா மோதல்

அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் தமிழ்நாடு-ராஜஸ்தான், பஞ்சாப்-பரோடா அணிகள் மோத உள்ளன. சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை  கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள் சென்னை உட்பட 6 நகரங்களில் நடந்தன. மொத்தம் 38அணிகள் பங்கேற்ற லீக் சுற்றில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றன. காலிறுதி போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடந்தன. முதல் காலிறுதியில் கர்நாடகாவை  9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபும்,  2வது காலிறுதியில் இமாச்சல் பிரதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடும்  வென்று அரையிறுதிக்கு முன்னேறின.  அதேபோல் 3வது காலிறுதியில்  பரோடா 8 விக்கெட் வித்தியாசத்தில்  அரியானாவையும், 4வது காலிறுதியில் ராஜஸ்தான் 16ரன் வித்தியாசத்தில்  பீகாரையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன.

அரையிறுதிப்போட்டிகள் இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இன்று பகல் 12 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதியில் தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் முஷ்டாக் அலி தொடரில் கடைசியாக மோதிய 3 போட்டிகளில் தமிழ்நாடு 2 போட்டிகளிலும், ராஜஸ்தான் ஒரு போட்டியிலும்  வென்றுள்ளன. நடப்புத் தொடரிலும் லீக் சுற்றில் தமிழ்நாடு ஒருபோட்டியில் கூட தோற்கவில்லை. ஆனால் ராஜஸ்தான் 37ரன் வித்தியாசத்தில்  கோவாவிடம் தோற்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட ராஜஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியதில்லை. ஆனால் தமிழ்நாடு 2முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு  2006ம் ஆண்டு நடந்த முதல் டி20 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு 2வது இடம் பிடித்தது. எனவே இந்த முறை பட்டம் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில்  தமிழ்நாடு உள்ளது.

அதற்கேற்ப  தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் உள்ள தமிழக வீரர்கள் அசத்தலாக விளையாடி வருகின்றனர். கூடவே ராஜஸ்தானும் முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேற வேகம் காட்டும். அதற்கேற்ப அந்த அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.தொடர்ந்து இன்று இரவு 7மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதியில் பஞ்சாப்-பரோடா அணிகள் விளையாட உள்ளன. முஷ்டாக் அலி தொடரில் பஞ்சாப் 4முறை இறுதி போ்ட்டிக்கு முன்னேறியும் கோப்பை வென்றதில்லை. ஆனால் பரோடா 3முறை முன்னேறி 2முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த 2 அணிகளும் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. மிகவும் வலுவாக உள்ள இந்த 2 அணிகளும் மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேற இன்று மல்லுக்கட்டும்.



Tags : Mushtaq Ali ,clash ,Rajasthan ,Tamil Nadu ,Punjab-Baroda , Mushtaq Ali semi-final Tamil Nadu-Rajasthan, Punjab-Baroda clash today More about this source text Source text required for additional translation information
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்