விவசாயிகள் போராட்டம், 5 மாநில தேர்தல் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு, டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு இடையே, பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றும் உரையை புறக்கணிக்க, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் 2 மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததால் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க, டெல்லியில் விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், இதில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல்லி செங்ேகாட்டைக்குள் ஊடுருவிய போராட்டக்காரர்கள், அங்குள்ள கம்பத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு விவசாய சங்க, சீக்கிய கொடிகளை ஏற்றினர். ஆனால், இந்த வன்முறைகளில் விவசாயிகள் ஈடுபடவில்லை என்றும், சமூக விரோதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் எதிர்க்கட்சிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தவிர, விரைவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இதில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மின்னணு தபாலில் வாக்களிக்கும் வசதி, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வசிக்கும் வெளிமாநிலத்தினர் வாக்களிக்க அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. மேலும், டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் மீது தேசத் துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை டெல்லி போலீசார் போட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் 2 கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதி இத்தொடர் தொடர் நிறைவடைகிறது. 2ம் கட்டத் கூட்டத் தொடர் மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிகிறது.

ஜனாதிபதியின் கூட்டுக் கூட்ட உரையில், மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் போன்றவை இடம் பெறும் என தெரிகிறது. ஆனால், அவருடைய உரையை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் கட்சிகள் அறிவித்துள்ளன. டிராக்டர் பேரணி வன்முறையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள இக்கட்சிகள், அது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அதை வலியுறுத்தி வருகின்றன. இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தே, ஜனாதிபதி உரையை அவை புறக்கணிக்கின்றன. இந்த தொடரில் எதிர்க்கட்சிளின் அமளிக்கும், எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் மத்திய அரசுக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்,’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ பிரைன் கூறுகையில், ‘‘மாநிலங்களில் பிளவுபட்டு, ஒருவருக்கொருவர் சண்டையிடும் எதிர்க்கட்சிகள், சர்ச்சைக்குரிய புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப்பதற்காக காரணங்களை பட்டியலிட்டு கூட்டு அறிக்கை வெளியிடும்,” என்றார்.

5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் எம்பி.க்களுக்கு உணவு வழங்குவதற்காக, கடந்த 1968ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற வளாகத்தில் வடக்கு ரயில்வே சார்பில் கேன்டீன் நடத்தப்பட்டு வருகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த கேன்டீனில்தான் உணவு உண்பார்கள். கடந்த 52 ஆண்டுகளாக ரயில்வே இந்த கேன்டீனை பராமரித்து வந்த நிலையில், கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி இந்த கேன்டீன் சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, எம்பி.க்களுக்கான உணவுகள் 5 நட்சத்திர ஓட்டல் சமையல் கலைஞர்களை வைத்து தயார் செய்வதற்கு கேன்டீனின் புதிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால், உணவின் விலையானது 5 நட்சத்திர ஓட்டல் விலையை காட்டிலும் குறைவாகவே இருக்கும்.

* கொரோனா வைரஸ் பரவியதால் கடந்தாண்டு மார்ச்  இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

* கடந்தாண்டு செப்டம்பரில் மழைக்கால கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஆனால், பல எம்பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே தொடர் முடிக்கப்பட்டது.

* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

*நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் தொடரில் கேள்வி நேரம் ஒரு மணி நேரத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

* கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி, இரு அவைகளும் தனித்தனி நேரங்களில் நடத்தப்பட உள்ளன.

* மாநிலங்களவை காலை 9 மணிக்கு தொடங்கி 2 மணி வரையில் மட்டுமே நடக்கும்.

* அதன் பிறகு மக்களவை பிற்பகல் 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையில் நடைபெறும்.

2வது முறை மத்தியில் மோடி தலைமையில் பாஜ 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, ஜனாதிபதியின் கூட்டுக் கூட்ட உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது இது 2வது முறையாகும். கடந்தாண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை தவிர்த்து, இதர எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி உரையை புறக்கணித்து அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தின.

புறக்கணிப்பவை

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்எஸ்பி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரளா காங்கிரஸ் (எம்), அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய மாநாட்டு கட்சி, ஆம்ஆத்மி, சிரோமணி அகாலிதளம்.

Related Stories:

>