சிங்கள அரசை கண்டித்து சென்னையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்: மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சென்னைதெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4  மீனவர்கள் கடந்த 18ம் தேதி நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி படுகொலை செய்ததுடன், மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத் தாக்கி மூழ்கடித்துள்ளனர்.

ஒப்பந்தத்தை மீறி அப்பாவி மீனவர்கள் பலர் சிங்களக் கடற்படையினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத் தற்போதும் 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டது தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த கொடூரப் படுகொலை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “ இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பாஜக அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த வன்செயலைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை, திருவான்மியூர், வடக்கு மாடவீதியில் சென்னைத் தெற்கு மாவட்ட திமுக சார்பில்  உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தெற்கில் உள்ள ஊரூர் குப்பம்-ஆல்காட் குப்பம்-ஓடை மாநகர்-திருவான்மியூர்-கொட்டிவாக்கம் - பாலவாக்கம் - சின்ன நீலாங்கரை - பெரிய நீலாங்கரை - சின்னாண்டி குப்பம் (பள்ளம்) - சின்னாண்டி குப்பம் (மேடு) - ஈஞ்சம்பாக்கம் - பனையூர் - நைனார் குப்பம் ஆகிய கடலோர கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>