×

பணிக்கு அடிக்கடி டிமிக்கி கொடுக்கும் டாக்டர்கள்; குமரி இஎஸ்ஐ மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு: உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமாரபுரம்: தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினால், அவர்களை இஎஸ்ஐ மருந்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதி. இப்படி சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு தரமான மருத்துவ சிகிக்சை கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். காப்பீட்டாளர்கள் குறிப்பிட்ட இஎஸ்ஐ மருந்தகத்தில்தான் மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்பதல்ல. எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி, மணவாளக்குறிச்சி, குழித்துறை, கருங்கல், நித்திரவிளை, இடைக்கோடு என்று மொத்தம் 8 இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் உள்ளன.

இந்த நிலையில் குழித்துறை, நாகர்கோவில், தக்கலையில் தலா 3 மருத்துவர்களும், மணவாளக்குறிச்சி, நித்திரவிளை, கருங்கல், இடைக்கோட்டில் தலா 2 மருத்துவர்களும், தலா 2 செவிலியர்களும் பணியில் உள்ளனனர். அதே வேளையில் ஆரல்வாய்மொழியில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியரும் பணியாற்றி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள 7 இஎஸ்ஐ மருந்தகங்களில் சுமார் 5 ஆயிரம் காப்பீட்டாளர்கள் இருக்கிறார்களாம். அதே வேளையில் தலைமை இடமான நாகர்கோவிலில் மட்டும் 40 ஆயிரம் காப்பீட்டாளர்கள் இருக்கின்றனராம். இஎஸ்ஐ மருந்தகங்கள் தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரையிலும் செயல்படுகின்றன.

தக்கலையில் மட்டும் தினசரி காலை 8 மணிக்கு மேல் தான் ஓபி செயல்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது. தக்கலையில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உள்ள 3 மருத்துவர்களில் 2 பேர் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது இல்லை என்பது காப்பீட்டார்களின் குற்றச்சாட்டு. அப்படியே வந்தாலும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மருந்து, மாத்திரைகளை கூட துண்டு சீட்டில் எழுதி கொடுத்து வெளியே வாங்க சொல்கிறார்களாம். இப்படி அடிக்கடி பணிக்கு வராமல் இஎஸ்ஐ மருத்துவர்கள் டிமிக்கி கொடுப்பதால், தக்கலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த காப்பீட்டார்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனராம்.

சரியான மருத்துவ சிகிச்சைகளும் அவர்களுக்கு கிடைப்பது இல்லையாம். இந்த நிலையில் சமீப காலமாக மருத்துவர்கள் பணியில் இல்லை, மருந்து, மாத்திரை கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி, தக்கலை, மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி இஎஸ்ஐ மருந்தகத்தில் உள்ள காப்பீட்டாளர்கள் நாகர்கோவிலுக்கு வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர். ஆகவே நாகர்கோவில் மருந்தகங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக இங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சுகருக்கான இன்சுலின், கொழுப்பு, ரத்த அழுத்த மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் உள்ள இஎஸ்ஐ மருந்தக ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக இஎஸ்ஐ மருந்தக ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: சமீப காலமாக குமரி மாவட்டத்தின் பல்வேறு இஎஸ்ஐ மருந்தகங்களில் இருந்தும் நாகர்கோவிலுக்கு மருந்து வாங்க வருகின்றவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சுகருக்கான இன்சுலின் தான் கேட்கின்றனர். இதனால் தினசரி கூடுதலாக 50 பேருக்கு இன்சுலின் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இங்குள்ள காப்பீட்டாளர்களுக்கு தேவையான மருந்துகளை தினசரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 15 நாளுக்குத்தான் சுகருக்கான மாத்திரைகள், இன்சுலின் ஆகியவை கொடுக்கப்படுகிறது. 30 நாளுக்கும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே பற்றாக்குறை மிக அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் ரூ.3 கோடிக்கான மருந்து கேட்டு தலைமை அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் ஒன்றரை கோடிக்கான மருந்துகளை கொடுத்து உள்ளனர். அதை வைத்து சமாளிப்பது கடினம் தான். ஆகவே 30 நாளுக்கும் மருந்து கொடுக்க முடியுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பயோ மெட்ரிக் வருகை பதிவு
கோவை மண்டலத்தில் உள்ள 48 இஎஸ்ஐ மருந்தகங்கள், மதுரை மண்டலத்தில் உள்ள 64 மருந்தகங்களில் 2 மருந்தகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மருந்தகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம். இதனால் தான் இந்த மண்டலத்தில் உள்ள மருந்தக டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவது இல்லையாம். ஆகவே பணிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் டாக்டர்களை அடையாளம் காணும் வகையில், நாகர்கோவிலில் உள்ள 8 மருந்தகங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு, சிசிடிவி காமிராக்களை வைத்து கண்காணிக்க வேண்டும் என்று காப்பீட்டாளர்கள் மற்றும் மருந்தக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடிட்டிங் குழுவுக்கு கவனிப்பு
இதற்கிடையே கடந்த 21ம் தேதி தணிக்கை குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 28ம் தேதிவரை குமரியில் தங்கி இருக்க வேண்டும். ஆனால் டாக்டர்களோ வராத காப்பீட்டாளர்களை வந்ததாக கணக்கு காட்டியதோடு, தணிக்கை குழுவினரை திற்பரப்பு அருவி, உலக்கை அருவி உள்பட பல சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்து சென்று விருந்துடன் கவனித்து அனுப்பி வைத்து விட்டார்களாம்.


Tags : Doctors ,pharmacies , Doctors who often give Timikki to work; Drug shortage in Kumari ESI pharmacies: Demand for action by top officials
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை