வடலூர் வள்ளலார் சபையில் தைப்பூச விழா : 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்...சன்மார்க்க கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு

நெய்வேலி:வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 150 வது தைப்பூச திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு 28ம் தேதி இன்று காலை 6.00 மணிக்கு கருப்பு திரை, நீலத்திரை, பச்சைதிரை, செம்மைத்திரை, பொன்மைத் திரை, வெண்மைதிரை, கலப்பு திரை ஆகிய ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

அப்போது ஜோதி தரிசனத்தை கண்ட பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என தாரக மந்திரத்தை பக்தி பரவசத்துடன் உச்சரித்து கொண்டே ஜோதி தரிசனம் கண்டு மகிழ்ந்தனர். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை (29ம்தேதி) அதிகாலை 5.30 மணி அளவில் ஜோதி தரிசனம் காண்பிக்க உள்ளனர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் பக்தர்கள் முககவசம், வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தனிமனித இடைவெளிவிட்டு வரிசையில் அனுப்பப்பட்டனர் மக்கள் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ளாத அளவுக்கு ஜோதி தரிசனம் காண்பதற்காக வெளியில் பெரிய திரைகள் மூலம் ஜோதி தரிசனம் காண்பித்தனர். இந்தாண்டு கொரோனா பரவலால் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

Related Stories:

>