×

வேளாண் சட்டத்தின் அபாயத்தை விவசாயிகள் உணரவில்லை; விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும்!: ராகுல்காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: வேளாண் சட்டங்களின் தீமைகள் விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களின் அபாயத்தை விவசாயிகள் உணரவில்லை என ராகுல்காந்தி தெரித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் மேலும் புரிந்துக் கொள்ளும் பட்சத்தில்  நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டார். தனது சொந்த தொகுதியான வயநாடில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கல்பேட்டா பகுதியில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் தற்போதைய நிலையை அனைவரும் அறிந்திருப்பதாகவும், ஒருசிலர் தொழிலதிபர் நலனுக்காக பிரதமர் மோடி ஆட்சி அமைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும், ஒருசிலரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். புதிய வேளாண் சட்டங்களின் அபாயத்தை விவசாயிகள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை எனவும், அவ்வாறு புரிந்துக் கொண்டிருந்தால் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள் எனவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.


Tags : Rakulkanti , Agricultural Law, Risk, Farmer, Rahul Gandhi
× RELATED காஷ்மீர் மக்களின் வலியையும்,...