×

கோயம்பேடு மார்க்கெட்டில் மாமூல் கேட்டு ரவுடி ரகளை!: வியாபாரிகளை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாமூல் கேட்டு ரவுடி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மாமூல் தராத 4 வியாபாரிகளை அந்த ரவுடி சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அங்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பெரியார் காய்கறி மார்க்கெட்டில் உள்ள சி - பிளாக் பகுதியில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது. நேற்றிரவு ரவுடி ஒருவர் மார்க்கெட் உள்ளே நுழைந்து வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அச்சமயம் டீ கடை ஒன்றின் உள்ளே நுழைந்து சிகரெட் கேட்டதாகவும், தனக்கு தினமும் மாமூல் தர வேண்டும் எனவும் ரவுடி மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமயம் அங்கு வந்த வியாபாரிகள் நால்வரை அந்த ரவுடி தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடியை மற்ற வியாபாரிகள் பிடிக்க முயலும் போது அவர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். குறிப்பாக வேலை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளியை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் வெட்டுப்பட்ட முருகன், முருகேசன் உள்ளிட்ட நான்கு வியாபாரிகள் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா போதையில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த ரவுடியை அங்கிருந்த வியாபாரிகள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோயம்பேடு மார்க்கெட்டில் மாமூல் கேட்டு ரவுடி ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சி கண்டறியப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்ற ரவுடியே அட்டகாசம் செய்தது தெரியவந்தது. இவர் மீது பெரியமேடு காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் உள்ளது. தனது நண்பர்களுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரத்தில் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலை வழக்கமாக கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர்களுக்கும் வடநாட்டு தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பின்மையை இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம் என அங்குள்ள வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : Coimbatu Marketplace , Coimbatore Market, Ordinary, Rowdy, Sickle, Merchant, CCTV Display
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள்...