×

ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்..! சிலைதிறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல திருவுருவச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

அதே போல. காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ‘ஜெயலலிதா வளாகம்’ என பெயர் சூட்டி திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா பாதையை பின்பற்றி முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்துவதாக புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது; சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அரசு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ல் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர், சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags : Jayalalithah ,Palanisami , Jayalalithaa's birthday will now be celebrated as a state festival ..! Chief Minister Palanisamy's announcement at the unveiling ceremony
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு