×

உத்தரப் பிரதேசத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நள்ளிரவில் தடியடி நடத்தி விரட்டியடித்த காவல்துறை

லக்னோ : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுருந்த விவசாயிகளை காவல்துறையினர் அடித்துவிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் உத்தரப்பிரதேச விவசாயிகள் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பாராவூட் என்ற இடத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவில் போராட்ட பந்தலுக்கு வந்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் தூங்கிக் கொண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

காவல்துறையினருக்கு தடியடிக்கு அஞ்சி விவசாயிகள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் சாலை விரிவாக்க பணிகள் முடங்கி இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அளித்த புகாரின் அடிப்படையிலேயே விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மற்றப்படி இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகள் மீண்டும் போராட்ட பந்தலுக்கு திரும்புவதை தடுக்கும் விதமாக பாராவூட் நெடுஞ்சாலை முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாஜக ஆதரவு மாநில அரசுகள் மிரட்டி வெளியேற்றி வருவதாக வேளாண் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Uttar Pradesh , Uttar Pradesh, farmers, stick
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...