சசிகலாவை வரவேற்று தூத்துக்குடியிலும் ஆதரவு போஸ்டர்கள்!: ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.க்கு தொடரும் நெருக்கடி..!!

தூத்துக்குடி: சசிகலாவை வரவேற்று நெல்லையில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியிலும் சசிகலாவை வரவேற்று அக்கட்சியை சேர்ந்தவர் போஸ்டர்களை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி நகரின் பல இடங்களில் அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஹென்றியே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்.

அடிமட்ட தொண்டனையும் அரியணையில் ஏற்றிய அம்மாவின் அவதாரமே, ஆளுமையை உருவாக்கிய ஆளுமையே, நட்பின் பரிசுத்தமே உள்ளிட்ட வாசகங்கள் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. சசிகலாவை வரவேற்று நெல்லையில் சுவரொட்டி ஒட்டி இருந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சுப்பிரமணி ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் மற்றொரு நிர்வாகி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளிப்படையாக சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க தொடங்கியிருப்பதால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சசிகலா தமிழகம் வரும் போது மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதால் அதிமுக-வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>