டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தப்போவதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 11ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. போராட்டத்தின் ஒருகட்டமாக குடியரசு தினத்தன்று விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் தடுப்புக்களை அகற்றிய விவசாயிகள், திடீரென டெல்லிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்குள்ள கொடி மரத்தில் ஏறி, சீக்கிய மத, விவசாய கொடிகளை ஏற்றினர். இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களை விரட்ட, பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா, வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் கூறினார்.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்த அவர்,குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்றார். மேலும் உறுதி அளித்தவாறே பேரணி அமைதியான முறையில் நடந்து முடியும் என்று தான் காவல்துறை நம்பியதாகவும், ஆனால் உரிய வழிமுறைகள் பின்பற்றாமல் விவசாய சங்க நிர்வாகிகள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீவத்சவா குற்றம்சாட்டினார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டுடன் இருந்ததால் தான் உயிரிழப்புகள் நேரிடவில்லை என்றும் அவர் கூறினார்.