×

விவசாயிகளின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்: குமாரசாமி ஆலோசனை

பெங்களூரு: விவசாயிகளின் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம்  தீர்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறைகள் நடந்துள்ளது. இதற்கு விவசாயிகள் மீது பழி சுமத்துவது சரியில்லை. விவசாயிகள் வரலாறு காணாத வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது போன்ற போராட்டத்தில் கலவரம், வன்முறை ஏற்பட்டது வருத்தத்தை தந்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் தீய சக்திகள் சேர்ந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விவசாயிகளே சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  வன்முறை சம்பவம் எப்படி நடந்தது, எதற்காக நடந்தது, தீயசக்திகள் எப்படி வந்தார்கள் என்பது குறித்து முழு விசாரணை நடத்தவேண்டும். நான்கு விவசாயிகளை கொல்ல முயற்சித்த சம்பவங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை விவசாயிகளே பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதை பார்க்கும் போது விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க நடந்த சம்பவமாக தெரிகிறது. இவர்களுக்கு பின்னால் தீயசக்திகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

 விவசாயிகள் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய விஷயம். இதை தான் உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஆனால் அப்படி நடைபெறாமல் இருப்பது வருத்தமான விஷயம். இந்த சம்பவத்தை ஆட்சியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இதனால் சர்வதேச அளவில் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போதும் காலம் கடந்து போகவில்லை. பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு ஏற்படுத்த முடியும்’’ என்றார்.

Tags : struggle ,negotiations ,Kumaraswamy , Farmer, struggle, negotiation, Kumaraswamy consultation
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...