×

கர்நாடகாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம்: மாநில அரசு புள்ளி விவரம் வெளியீடு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆண், பெண் பாலின கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் நகர பகுதியில் ஆயிரம் ஆண்பிள்ளைகளுக்கு 978 பெண்களும் கிராம பகுதியில் ஆயிரம் ஆண் பிள்ளைகளுக்கு 910 பெண்கள் என்ற வகையில் இருந்தது. ஐந்தாண்டுகளுக்கு பின் 2019-20ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் இது முற்றிலும் மாறியுள்ளது. நகர பகுதியில் ஆயிரம் ஆண் பிள்ளைகள் இருக்க பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்து 63ஆக உள்ளது.

ஆனால் கிராம புறங்களில் ஆயிரம் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை 931ஆக உள்ளது. பிள்ளைகள் பிறப்பு விகிதத்தில் மட்டுமில்லாம் ஆண்-பெண் எண்ணிக்கையிலும் வித்யாசம் உள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டில் மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் இருந்தனர். 2019-20ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு ஆயிரத்து 35 பெண்கள் உள்ளனர். பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், துமகூரு, மைசூரு, ஷிவமொக்கா, சிக்கபள்ளாபுரா, தார்வார், உடுப்பி, சித்ரதுர்கா, மண்டியா, பல்லாரி, கலபுர்கி, கோலார், கதக் மற்றும் பாகல்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் பெண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. குடகு, தென்கனரா, சாம்ராஜ்நகர், கொப்பள், யாதகிரி, ரெய்ச்சூர், பெலகாவி, பீதர், விஜயபுரா, ஹாசன், சிக்கமகளூரு, ஹாவேரி, தாவணகெரே, ராம்நகரம், வடகனரா ஆகிய 15 மாவட்டங்களில் குறைந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் பெண் பிறப்பு விகிதம் அதிகரிக்க பெற்றோர்களிடம் பெண் குழந்தை பிறப்பு மீது ஏற்பட்டுள்ள நல்லெண்ணம், ஆண்-பெண் இரண்டில் ஒன்று இருந்தால் போதும் என்ற தீர்மானம், கருவில் வளரும் பெண் சிசு கலைப்பு குறைப்பு, ஆண்களுக்கு இணையாக அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பது, வயதான காலத்தில் பெற்றோரை பேணி காக்கும் பொறுப்பை பெண்கள் ஏற்றுகொள்வது போன்றவை காரணம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு இணையாக அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பது,வயதான காலத்தில் பெற்றோரை பேணி காக்கும் பொறுப்பை பெண்கள் ஏற்றுகொள்வது போன்வற்றால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Tags : women ,men ,Karnataka , Than men in Karnataka More for Women: State Government Statistics Release
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்