×

இவ்வாண்டுக்கான கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பேரவை மற்றும் மேலவை கூட்டு கூட்டத்தில் ஆளுநர் வி.ஆர்.வாலா உரையாற்றுகிறார். மாநில சட்டப்பேரவையின் இவ்வாண்டிற்கான கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தில் ஆளும் கட்சி இவ்வாண்டு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆளுநர் வி.ஆர்.வாலா உரையாற்றுகிறார். பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் ஆளுநர் வி.ஆர்.வாலாவை மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி, பேரவை தலைவர் விஷ்வேஸ்வரஹெக்டே காகேரி, முதல்வர் எடியூரப்பா ஆகியோர் முறைப்படி அழைத்து செல்கிறார்கள்.

அதை தொடர்ந்து வரும் 29ம் தேதி மற்றும் பிப்ரவரி 1 முதல் 5ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவி–்க்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இவ்வாண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் ஆளும் கட்சி–்க்கு எதிராக போர்கொடி உயர்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. குறிப்பாக நில சீர்த்திருத்த சட்டம், பசுவதை தடை சட்டம், வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள லவ் ஜிகாத் சட்டம், கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த திட்டமிட்ட எப்டிஏ தேர்வு முறைகேடு, ஏபிஎம்சி சட்ட திருத்தம் உள்பட பல பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செயல்படுவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டமும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. வழக்கமாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர்கள் ஜே.சி.மாதுசாமி, டாக்டர் சுதாகர் ஆகியோர் பதில் கொடுப்பார்கள். அவர்களிடமிருந்த சில முக்கிய துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் கொடுக்காமல் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை விதிமுறைகள்படி ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பத்தாண்டுகளாக திட்டமிட்டப்படி 60 நாட்கள் பேரவை கூட்டம் நடக்கவில்லை. சபாநாயகராக பொறுப்பில் உள்ளவர்கள், 60 நாட்கள் பேரவை கூட்டம் நடத்த திட்டமிட்டாலும் பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா காரணம் காட்டி 31 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டம் நடந்தது. இவ்வாண்டாவது திட்டமிட்டப்படி 60 நாட்கள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையில் சட்டமேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக இரண்டாவது முறையாக கடந்த 13ம் தேதி பாஜ சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடப்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல், துணை தலைவராக இருந்த தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டதால், காலியாக இருக்கும் பதவியை வரும் 29ம் தேதி தேர்தல் நடத்தி முடித்து புதிய துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபின், அன்றே மேலவை தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பிரதாப்சந்திரஷெட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : session ,Governor ,Karnataka Legislative Assembly , Of the Karnataka Legislative Assembly for this year Meeting begins today: Governor addresses
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...