×

முஷ்டாக் அலி டி20 அரியானாவை வீழ்த்தி பரோடா த்ரில் வெற்றி

அகமதாபாத்: முஷ்டாக் அலி டி20 கோப்பை 3வது காலியிறுதியில் பரோடா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோத உள்ளன. சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் 3வது காலிறுதிப் போட்டியில் நேற்று அரியானா-பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா முதலில் பந்துவீச, அரியானா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. அந்த அணியின் ராணா 49, சிவம் சவுகான் 35, சைதன்ய பிஷ்னோய் 21, சுமித் குமார் 20* ரன் எடுத்தனர். பரோடா தரப்பில் கார்த்திக் காக்டே 2, சேத், பி.பதான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 3 பேர் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா விளையாடியது.  

தொடக்க வீரர்கள் கேப்டன் கேதர் தேவ்தர் 43 ரன் (40 பந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஸ்மித் படேல் 21 ரன் (23பந்து, 3பவுண்டரி) எடுத்தனர். அடுத்து வந்த விஷ்ணு சோலங்கி, அபிம்னயூ ராஜ்புத் இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அதனால் பரோடா வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி ஓவரில் 18ரன் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. சுமித் குமார் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் (யார்க்கர்) அபிமன்யூ 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தை விஷ்ணு திருப்பியடிக்க, சுமித் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு ரன் எடுத்தார் விஷ்ணு.

தொடர்ந்து 3வது பந்தில் அபிமன்யூ ஒரு ரன் எடுத்தார். அதனால் வெற்றிக்கு 3 பந்தில் 15 ரன் தேவை என நெருக்கடியில் இருந்தது பரோடா. ஆனால் விஷ்ணு அடுத்த 3 பந்துகளையும் 6, 4, 6 என விளாச, த்ரில் வெற்றி பரோடா வசம் ஆனது.
அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து வென்றது. விஷ்ணு 71* ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), அபிமன்யூ 13 ரன்னுடன் (13பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அரியானா தரப்பில் சாஹல், சுமித் குமார் தலா  ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதுகின்றன. முன்னதாக, பாபா அபராஜித் 52*, ஷாருக்கான 40* ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தமிழகம் 2வது காலிறுதியில் இமாச்சல் பிரதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

Tags : Mushtaq Ali ,Baroda Thrill ,T20 Haryana , Baroda Thrill wins over Mushtaq Ali T20 Haryana
× RELATED முஷ்டாக் அலி டி20 திரிபுராவை வென்ற தமிழ்நாடு