×

இன்று அதிகாலை முதல் அதிரடி நடவடிக்கை; நெல்லையில் புதியபாலத்திற்கு இடையூறான கடைகள் இடிப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தையொட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகள் இன்று அதிகாலை இடித்து அகற்றப்பட்டன. நெல்லை மாநகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு சாலை, பாலம் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலப்பணி முழுமையாக முடிந்தும் இதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெறாததால் கடந்த சில மாதங்களாக பாலம் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கிறது.

இதனிடையே பாலத்தின் தொடக்கப் பகுதியில் உள்ள இணை சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதியான தேவர் சிலை அருகில்  சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருக்கிறது. இந்த இடங்களில் கடைகள், அரசு கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. எனவே இவற்றை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 12ம்தேதி நேரடியாக நோட்டீஸ் வழங்கப்பட்டன. இதற்காக கடைகள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை நெல்லை உதவி கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி,  உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

வீடுகள், கடைகள் என 32 கட்டிடங்கள் மற்றும் ஒரு காம்பவுண்டு சுவர், அரசு கட்டிடம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் வசம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் அவகாசம் அளித்து இவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர். இதையடுத்து ேநாட்டீஸ் பெற்றவர்கள் கடந்த சில  தினங்களாக தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இடங்களை காலி செய்யத்தொடங்கினர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மீண்டும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று நினைவூட்டினர்.

அவகாசம் கொடுத்த நாட்களை விட அதிகநாட்கள் கடந்த நிலையில் இன்று அதிகாலை பாளை தாசில்தார் பகவதிபெருமாள், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களுடன் முகாமிட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற தொடங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சியினரும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் அதிகாலை முதல் பரபரப்பு நிலவியது. இந்த கட்டிடங்கள் அகற்றப்பட்ட பின்னர் உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு கொக்கிரகுளம் புதிய பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : shops ,Demolition ,Police mobilization ,bridge ,Nellai , Action from early this morning; Demolition of shops obstructing the new bridge in Nellai: Police mobilization
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ