×

'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .

திருமலை:எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்கள் என கைதான தம்பதியினர் இறுதிச்சடங்கின்போது போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி சிவநகரை சேர்ந்தவர் புருஷோத்தம், மகளிர் கல்லூரி முதல்வர். இவரது மனைவி பத்மஜா. இவர்களது மகள்கள் அலேக்யா(27), சாயிதிவ்யா(22). புருஷோத்தம், பத்மாஜா தம்பதியினர் கடந்த 24ம் தேதி இரவு 2 மகள்களையும் வீட்டில் நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்துள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து புருஷோத்தம் தம்பதியினரை கைது செய்தனர். தொடர்ந்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட 2 மகள்களின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதற்காக புருஷோத்தம், பத்மஜாவை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, புருஷோத்தம் தனது மகள்களின் சடலங்களுக்கு இறுதி சடங்குகளை செய்தார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள், அவரது பெற்றோர் என 4 பேரின் நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை பிரசாந்த் நகரில் வசித்து வந்த இந்த குடும்பம், சிவநகரில் புதிய வீட்டைக் கட்டி ஆகஸ்ட் 14ம் தேதி குடியேறினர். புதிய வீட்டிற்கு வந்த நாளிலிருந்து, பூஜைகள் மற்றும் விரதங்களை தொடர்ந்து செய்து வந்தனர். கொரோனா காலம் என்பதால் உறவினர்களை அழைக்காமல், வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்தனர். அதன்பிறகு 2 மகள்களும், தாயும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என்று அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

அலேக்யாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை சோதனை செய்தபோது, அவர் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு ‘சிவா வருகிறார்’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இளைய மகள் சாயிதிவ்யா, புருஷோத்தமனின் சக ஊழியருக்கு வாட்ஸ் அப்பில் ‘நீங்கள் ஒரு புத்தரைப் போன்றவர் மாமா, உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனால் அவரது வீட்டில் பெற்றோருடன் இருக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது. நரபலி கொடுக்கப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்பு வரை வீட்டில் இருந்து பூஜை சத்தமும், அலறல் சத்தமும் கேட்டதாக அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி காலை மந்திரவாதிகள் போன்று வீட்டிற்கு வந்த சிலர் மந்திரித்த தண்ணீரை எலுமிச்சையுடன் சேர்த்து தெளித்துவிட்டு சென்றுள்ளனர். அன்றிரவுதான் 2 மகள்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். அவர்களை தேடிவருகிறோம்.  புருஷோத்தமன் குடும்பத்தினருக்கு ₹5 கோடி மதிப்பு சொத்து உள்ளது. அந்த சொத்துக்களை அடைய யாராவது திட்டமிட்டு பெற்றோரை வைத்தே நரபலி கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்’ என தெரிவித்தனர். இந்நிலையில் கொலையான 2 மகள்களின் இறுதிச்சடங்கிற்கு நேற்று மாலை அழைத்துவரப்பட்ட பேராசிரியர் தம்பதி திடீரென, ‘அடப்பாவிகளா... எங்கள் மகள்கள் சொர்க்கத்திற்கு செல்வதை தடுத்து விட்டீர்களே. இன்னும் சில மணி நேரம் இருந்திருந்தால் அவர்களே உயிருடன் வந்திருப்பார்கள். அதையும் கெடுத்துவிட்டீர்களே’ என வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இதனிடையே தம்பதி இருவரையும் போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களது  வீட்டிற்கு வந்து சென்ற மந்திரவாதிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.



Tags : daughters ,parents ,heaven ,funeral , நரபலி
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்