×

பாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி:ஆடைக்கு மேலே ஒரு பெண்ணின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் வழங்கி உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதில்,பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என்று கருதப்படும். அதேநேரத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறையாகாது. அது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வராது என தெரிவிக்கப்பட்டது. இதில் பாலியல் தொடர்பான வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற கருத்து நாடு முழுவதும் இருக்கும் நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு பல்வேறு தரப்பிலும் கேள்விகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று ஒரு முறையீட்டை கோரிக்கையாக வைத்தார். அதில்,ஆடைக்கு மேலே ஒரு பெண்ணின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது அதிர்ச்சியான ஒன்றாகும். அதனை ஏற்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேல்முறையீடும் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு அடுத்த ஓரிரு தினங்களில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.


Tags : Central Government ,Supreme Court ,Mumbai High Court , Sex, Federal Government, Supreme Court, Appeal
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...