×

பழி போட வாய்ப்பு தராதீர்கள்: விவசாயிகளுக்கு தலைவர்கள் அறிவுரை

ராகுல் காந்தி (காங். தலைவர்): வன்முறை எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. இதில், யார் காயமடைந்தாலும், அதனால் பாதிக்கப்படப் போவது நாடுதான். எனவே, நாட்டின் நலன் கருதி விவசாயத்திற்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும். சரத் பவார் (தேசியவாத காங். தலைவர்): பஞ்சாப், அரியானா, உபி.யை சேர்ந்த விவசாயிகள் ஒழுங்கான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில்  மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. இன்று நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், அதன் பின்னணியில் உள்ள விஷயத்தை ஒதுக்கி விட முடியாது. விவசாயிகள் இனி அமைதியான முறையில் அவரவர் கிராமத்திற்கு திரும்பி செல்ல வேண்டும். அரசு உங்கள் மீது பழி போட வாய்ப்பு தராதீர்கள்.

அமரீந்தர் சிங் (பஞ்சாப் முதல்வர்): டெல்லியில் கண்ட காட்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சிலரால் நடத்தப்பட்ட வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாதது. அமைதியான முறையில் போராடும் விவசாயிகள் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. விவசாய தலைவர்கள் விலகிக் கொண்டு, பேரணியை தற்காலிகமாக கைவிட வேண்டும். உண்மையான விவசாயிகள் டெல்லியை காலி செய்து விட்டு, அவரவர் மாநில எல்லைக்கு திரும்ப வேண்டும். ஆம் ஆத்மி: டெல்லி வன்முறையை கடுமையாக கண்டிக்கிறோம். நிலைமை இவ்வளவு மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது. 2 மாதமாக இப்போராட்டம் அமைதியான முறையில் நடந்துள்ளது. இன்றைய வன்முறைக்கு காரணம் அந்நிய சக்திகள் என விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியிருக்கிறார்கள். இந்த வன்முறை விவசாயிகள் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும்.

மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): முதலாவதாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதிலும், டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராடியும், அவர்களை மிக சாதாரணமாக மத்திய அரசு கையாண்டது. கடுமையான சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். டெல்லி தெருக்களில் நடந்த வேதனையான சம்பவங்கள் ஆழ்ந்த கவலை தருகின்றன. நமது விவசாய சகோதர, சகோதரிகள் மீது மத்திய அரசின்  உணர்ச்சியற்ற அணுகுமுறையும் அலட்சியமும் இந்த நிலைமைக்கு குற்றம் சாட்டப்பட வேண்டும்.

கன்னாட்பிளேஸ் மூடப்பட்டது
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை வெடித்ததால் வர்த்தக மையமான கன்னாட்பிளேஸ் நேற்று முழுவதும் மூடப்பட்டது. டெல்லி போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று கன்னாட்பிளேஸ் கடைகள் மூடப்படுவதாக அதன் தலைவர் அதுல் பார்கவா தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் கன்னாட்பிளேஸ் கடைகள் பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும். அங்கு விற்பனை களைகட்டும். ஆனால், இந்த முறை பாதுகாப்பு காரணம் கருதி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
டெல்லியில் வன்முறை வெடித்ததால் மத்திய டெல்லி மற்றும் வடக்கு டெல்லி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் திடீரென மூடப்பட்டன. இதுதொடர்பாக டிவிட்டரில் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு வந்தது. குறிப்பாக இந்திரபிரஸ்தா மெட்ரோ, சமயபூர் பத்லி, ரோகினி செக்டார், ஹெய்டர்பூர் பத்லி மோர், ஜகாங்கீர்புரி, ஆதர்ஷ்நகர், ஆசாத்பூர், மாடல் டவுண், ஜிடிபி நகர், விஸ்வாவித்யாலயா, விதான் சபா, சிவில் லைன் மெட்ரோ பாதைகள் மூடப்பட்டன.

காலை 7 முதல் மாலை 3 மணி வரை...
காலை 7 மணி: டெல்லி  அரியானா திக்ரி எல்லை: தடுப்புகளை மீறி விவசாயிகள் தலைநகருக்குள் நுழைந்தனர்.
காலை 8.30 மணி: டெல்லி  அரியானா சிங்கு எல்லை: தடுப்புகளை தகர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.
காலை 9.30 மணி: டெல்லி-உபி காஜிபூர் எல்லை: ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர், பைக் மற்றும் கார்களில் டெல்லிக்குள் நுழைந்தனர்.
காலை 10 மணி: சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதி அருகே போலீசார் - விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
காலை 10.30 மணி: அக்சர்தாம் பகுதியிலும் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் சாலையில் நின்றிருந்த கார்களையும், மாநகர பேருந்துகளையும் அடித்து சேதப்படுத்தினர்.
காலை 11 மணி: வன்முறையில் ஈடுபட்ட சிலர் கத்தியுடன் போலீசாருடன் மோதினர். இதனால் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. பேரணி செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடம் மாறி, சாரை காலே கான் பகுதி நோக்கி முன்னேறினர்.
பகல் 12 மணி: முகர்பா சவுக் பகுதி அருகே வன்முறை நிகழ்ந்தது. போராட்டக்காரர்கள் ஐடிஓ பகுதியை அடைந்தனர். அங்கு வாகனங்களையும், பஸ்களையும் அடித்து நொறுக்கிய அவர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். டிராக்டரை வேகமாக ஓட்டி போலீசாரை விரட்டினர். அங்கிருந்து பலரும் டிராக்டர், கார், பைக்கில் படுவேகமாக செங்கோட்டை நோக்கி முன்னேறினர். செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசிய கொடி ஏற்றும் இடத்தில், விவசாய சங்க கொடி ஏற்றப்பட்டது.
பகல் 1 மணி: வன்முறையில் பலியான விவசாயி நவ்னீத் சிங் என்பவரின் சடலத்துடன் ஐடிஓ பகுதியில் விவசாயிகள் மறியல் செய்தனர்.
பிற்பகல் 2.30 மணி: ஐடிஓ மற்றும் செங்கோட்டையில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
மாலை 3 மணிக்கு பிறகு: செங்கோட்டையில் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஐடிஓ பகுதியிலும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Tags : Leaders , Do not give a chance to blame: Leaders advise farmers
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...