×

காஞ்சிபுரத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் 54.21 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எஸ்.பி. சண்முகபிரியாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, தியாகிகளுக்குப் பொன்னாடை  அணிவித்து கௌரவித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களும், நற்சான்றிதழ்களும் வழங்கினார்.

 பின்னர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 84 ஆயிரத்து 195 ரூபாய் மதிப்பில் கத்தரிக்காய், மிளகாய், முருங்கை பயிர்களுக்கான இடுபொருட்கள், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 10 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் 24 லட்சத்து 92 ஆயிரத்து 400 ரூபாய், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு டிராக்டர், ஆட்டோ வாங்க ரூ. 9 லட்சத்து 2 ஆயிரத்து 577 ரூபாய் மானியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச சலவைப்பெட்டி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48 ஆயிரத்து 710 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கைப்பேசி வாங்க 5 பயனாளிகளுக்கு ரூ.63 ஆயிரத்து 995 ரூபாய் உள்ளிட்ட  77 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 21 ஆயிரத்து 415 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த விழாவில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் (பொறுப்பு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : celebrations ,Kanchipuram ,Republic Day , 54.21 lakh worth of welfare assistance to the beneficiaries of the Republic Day celebrations in Kanchipuram
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்