குடியரசு தினத்தையொட்டி காந்தி சிலைக்கு மாலை போடுவதில் காங்கிரஸ் - பாஜ கடும் மோதல்: கொத்தவால்சாவடியில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி 55வது வட்டத்துக்கு உட்பட்ட நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு மாலை போடுவதற்காக பாஜவினர் வந்தனர். இதற்கு அங்கு ஏற்கனவே மாலை போட்டு பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரண்டு கட்சியினரும் அடிதடியில் ஈடுபட்டு பாஜவினர் மாலை அணிவித்தனர்.

தகவலின்பேரில் கொத்தவால்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 55வது வட்ட தலைவர் முரளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஏழுகிணறு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். இதேபோல் பாஜ பகுதி மண்டல தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பாஜவினரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க கொத்தவால்சாவடி காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். அதன்படி பாஜ பிரமுகர் கிரிநாத் உள்ளிட்டோர் நேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருதரப்பினரிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: