×

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் 3.5 கி.மீ.க்கு ராணுவ அணிவகுப்பு: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கோலாகலம்

புதுடெல்லி: நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும், 3.5 கிமீ தூரத்துக்கு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாடு  முழுவதும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவி வருவதோடு, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சவால் நிறைந்த இந்த சூழலில், நாட்டின் 72வது குடியரசு தின விழா நேற்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது. 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவில், கடந்த காலங்களில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், நேற்று 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. முதலில், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராஜபாதை வந்த பிரதமர் மோடி, செங்கோட்டையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரவேற்றார்.  21 குண்டுகள் முழங்கபாரம்பரிய முறைப்படி தேசியக்கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த ஆண்டு அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.

வழக்கமாக, 8.5 கிமீ தூரத்துக்கு நடைபெறும் அணிவகுப்பு, இந்த ஆண்டு 3.5 கிமீ தூரமாக குறைக்கப்பட்டு இருந்தது. அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில், டி-90 டாங்கிகள், சம்விஜய் எலக்ட்ரானிக் போர் அமைப்பு மற்றும் சுகோய் -30 எம்கேஐ போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நாட்டின் பாரம்பரியம், பொருளாதாரத்தை சித்தரிக்கும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 17 அலங்கார வாகனங்கள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவம் சார்பில் 7 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றன. பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன.ஒடிசாவின் கலஹந்தியை சேர்ந்த நாட்டுப்புற நாடனமாக பஜாசல், ஆரோக்கியமான இந்தியா, சுயசார்பு இந்தியா திட்டத்தை  விளக்கும் வாகனங்களும் ராஜ்பாத்தில் நடந்த அணிவகுப்பில் கண்களை கவர்ந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதிய பாபர் மசூதி கட்டும் பணி தேசியக்கொடி ஏற்றி தொடக்கம்
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இருக்கும்  இடத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள தானிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மசூதியுடன் மருத்துவமனை, நூலகம் உள்ளிட்டவைகளும் கட்டப்பட உள்ளன. இந்நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று, மசூதி கட்டுவதற்கான பணி தேசியக்கொடியை ஏற்றி வித்தியாசமான முறையில் தொடங்கி வைக்கப்பட்டது. மசூதி கட்ட அமைக்கப்பட்டுள்ள இந்தோ - இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசியக்கொடியை ஏற்றினார். அறக்கட்டளையின் 12 உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நாட்டு, மசூதியை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

55 ஆண்டுகளில் முதன்முறை சிறப்பு விருந்தினர் மிஸ்ஸிங்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தில் வெளிநாடுகளை சேர்ந்த அதிபர்கள், முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கவுரவிப்பார்கள். இந்தாண்டு விழாவில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தனது நாட்டில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா பரவியதால், விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இருப்பினும், நேற்று அவர் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக சிறப்பு விருந்தினர் இன்றி, இந்த குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

கூகுளின் சிறப்பு டூடுல்
நாட்டில் தேசிய விழாக்கள், பண்டிகைகள், தலைவர்கள் மற்றும் சாதனை படைத்தவர்களின் பிறந்த நாட்கள் உள்பட முக்கிய, சிறப்பு வாய்ந்த நாட்களில் அது தொடர்பான ‘டூடுல்’ வெளியிட்டு கூகுள் கவுரவிப்பது வழக்கமாகும். நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் நேற்று அதுபோல் சிறப்பு டூடுலை வெளியிட்டது. நாட்டின் பாரம்பரியம், கலாசாரங்களை அது பிரதிபலித்தது. மும்பையை சேர்ந்த ஆன்கர் பான்டேகர் என்ற கலைஞர் வரைந்த குடியரசு தின சிறப்பு ஓவியத்தை கூகுள் பதிவிட்டு இருந்தது. பின்னணியில் அழகான கட்டிடங்கள் லேசான ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்றிருந்தது. பல்வேறு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்த மக்கள், பச்சை நிற வண்ணத்திலும் இருந்தனர்.

மோடி, ராகுல் வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள  டிவிட்டர் பதிவில், ‘நாடு 72வது குடியரசு தினத்தை கொண்டாடுகின்றது. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்,’ என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  தனது டிவிட்டர் பதிவில், ‘சத்யாகிரகத்தில் ஈடுபடும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு தொழில் புரிவோர், வேலை தேடும் இளைஞர் அல்லது பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசி என இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றனர். குடியரசு உங்களிடம் இருந்து வந்தது. குடியரசு உங்களுக்கு சொந்தமானது,’ என கூறியுள்ளார்.

வங்கதேச வீரர்கள் பங்கேற்பு
கடந்த 1971ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது. இதை நினைவு கூறும் வகையிலும், இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையிலும், முதல் முறை குடியரசு அணிவகுப்பில் வங்கதேச ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த 122 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தாண்டும் கவர்ந்த மோடி தலைப்பாகை
குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களில் பிரதமர் மோடி அணிந்து வரும் தலைப்பாகை. உலகளவில்  சிறப்பு கவனம் பெறும். இந்தாண்டு குடியரசு தின விழாவுக்கு அவர் சிவப்பு நிறத்தில், மஞ்சள் நிற புள்ளிகள் போடப்பட்டு இருந்த பகட்டான தலைப்பாகையை அணிந்து வந்தார். இது, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ‘அலாரி பாக்தி’ எனப்படும் இந்த அரச குடும்ப தலைப்பாகையை குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அரச குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கி இருந்தனர். இதை தான் நேற்று அவர் அணிந்து வந்தார்.

131 அடி உயரத்தில் தேசியக்கொடி
குடியரசு தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 30க்கு 20 அடி என்ற அளவில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடியை 131 அடி உயர கம்பத்தில் எல்லைப் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்எஸ் ஜம்வால் ஏற்றினார். இந்த கொடியை பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகளில் வெகு தொலைவில் இருந்தும் கூட பார்க்க முடியும்.

முதன்முதலாக பங்கேற்ற ரபேல்
குடியரசு தின விழாவில் இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களும் கலந்து கொண்டு சாகசங்களை செய்து காட்டின. தனியாக பிரம்மாஸ்திரா வடிவத்தை ரபேல் விமானங்கள் ஏற்படுத்தின. 2 ஜாக்குவார் போர் விமானங்கள், 2 மிக் 29 ரக விமானங்களுடன் இணைந்து சாகசங்களை செய்தன. ரபேல் விமானம் முன்செல்ல மற்ற  போர் விமானங்கள் இணைந்து ‘வி’ வடிவத்தை உருவாக்கி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

Tags : celebrations ,Republic Day ,Delhi , Republic Day Celebration in Delhi 3.5km military parade: riot amid corona threat
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...