×

நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றினார்: முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன

சென்னை: நாட்டின் 72வது குடியரசு தின விழா நேற்று தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 72வது குடியரசு தின விழா நேற்று தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராணுவ ஹெலிகாப்டர் வானத்தில் பறந்தபடி தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியது. இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொண்டார். முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கவர்னர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், விழா மேடைக்கு வந்த கவர்னரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்ததும், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விருது பெற்றவர்கள் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, சாகச நிகழ்ச்சி, கலை, கலாச்சாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.   இதைத்தொடர்ந்து 17 துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், துணை தூதர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் கலந்து கொண்டனர். விருது பெற்றவர்கள் விவரம்:ராணிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவிகளின் உயிரை காப்பாற்றியதற்காக உதவி ஆசிரியர்  பா.முல்லைக்கு அண்ணா பதக்கமும், ₹1 லட்சத்துக்கான காசோலையும்  வழங்கப்பட்டது. அதேபோல், ஓசூர் வனசரகத்தில் கால்நடை உதவி மருத்துவராக உள்ள எம்.பிரகாஷ், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுச்சுவர் இல்லாத 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த யானையை மீட்க முயற்சி செய்ததை பாராட்டி அண்ணா விருது வழங்கப்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் இருந்த இரண்டு பாறாங்கல்லை பார்த்து அவசரகால பிரேக்கை பயன்படுத்தி 1,500 பயணிகளின் உயிரை காப்பாற்றிய  ரயில் ஓட்டுனர் சுரேஷுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பிரிவில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த புகழேந்திரன் ஆம்புலன்ஸ் வாகனத்தை சரியான நேரத்தில் இயக்கி பலரது உயிர்களை காப்பாற்றியதை பாராட்டி அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோயம்புத்தூரை சேர்ந்த அப்துல் ஜாபருக்கு வழங்கப்பட்டது. கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில்  பணியாற்றியமைக்காக சென்னை தெற்கு மண்டலம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, சேலம்  மண்டலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜூ, விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகநாதன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காவலூர் மத்திய புலனாய்வு பிரிவு  ராஜசேகரன் ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் வழங்கப்பட்டது.

சேலம் நகர காவல் நிலையத்துக்கு முதல் பரிசு
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த சேலம் நகர காவல் நிலைய ஆய்வாளர் பா.குமார் முதல் பரிசிற்கான கோப்பையை பெற்றார். 2வது இடத்தை, திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் பா.சந்திரசேகரன் பெற்றார். 3வது இடத்தை சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் கி.அஜூகுமார் பெற்றார்.

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம், விருது
2020-2021ம் ஆண்டுக்கான நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை க.செல்வக்குமாருக்கு முதல்வர் வழங்கினார். ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் குழுமம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமத்துக்கு சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம், விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமத்துக்கு வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.

மாணவிகளின் கலைநிகழ்ச்சி ரத்து
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா காரணமாக இது ரத்து செய்யப்பட்டது.

Tags : Banwarilal ,occasion ,country ,Tamil Nadu ,Republic Day , The 72nd Republic Day of the country is celebrated in Tamil Nadu Governor Banwar hoists national flag
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...