×

கால்நடை தீவனத்திற்கு மழையால் வீணாகிய நெற்கதிரை அறுவடை செய்யும் விவசாயிகள்

திருவாடானை :  திருவாடானை பகுதியில் கால்நடை தீவனத்திற்கு மழையில் வீணாகிப் போன நெல் கதிரை விவசாயிகள் அதிக வாடகை கொடுத்து இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு அதிகமான நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் கீழே சாய்ந்து விட்டது.

தண்ணீர் வெளியேற முடியாமல் விளைந்த நெல் கதிர்கள் அனைத்தும் முளைத்து போய் விட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் வீணாகி நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கும் பணி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாடுகளுக்கு வைக்கோல் தேவைப்படுவதால் தீவனத்திற்காக மழையால் நனைந்து வீணாகிப் போன நெல்வயல்களில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 வாடகை கொடுத்து கதிர் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்தோம்.

ஆனால் இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாடுகளுக்கு வைக்கோல் தேவைப்படுகிறது. எனவே வைக்கோலுக்காக வீணாகிப் போன நெல் கதிர்களை அறுவடை செய்கிறோம். செல்கள் அனைத்தும் அழுகி முளைத்து விட்டதால் சிறிய அளவில் கிடைக்கும் நெல்லை கூட வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை. தண்ணீரில் அறுவடை செய்வதால் ஆயிரம் ரூபாய்க்கு அறுவடை செய்த நிலையில், இப்போது ரூ.3 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் முன்பு டயர் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்தோம். இப்போது தண்ணீரில் அறுவடை செய்வதால் செயின் இயந்திரம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. வைக்கோலும் முழுமையாக கிடைக்கவில்லை. மழையில் அழுகி விட்டதால் சிறிதளவே கிடைக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் மாட்டு தீவனத்திற்காக அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எங்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Thiruvadanai: In Thiruvananthapuram area, paddy paddy wasted in the rains for livestock fodder has been rented out to farmers.
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...