×

நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் பார்வதி தேவி கைகளால் உருவான மணல் லிங்கம்

* தாமரை இல்லாததால், கண்மலரால் பூஜித்த பெருமாள்
* தீண்டாத் திருமேனியாக அருள்பாலிக்கும் சிவபெருமான்

* கலக்கல் கார்னர்

நெமிலி : திருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் திருமாற்பேறு என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது. ஒருமுறை சிவனுக்கும் பார்வதிக்கும் தமக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென பார்வதிதேவி, பரமேஸ்வரனின் கண்களை தன் கரங்களால் மூடினார். அது ஒரு கண நேரம்தான் என்றாலும், உலகத்தில் அது பல யுகங்களாக நீடித்தது. சிவனின் கண்களாக அறியப்படும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களும் மூடப்பட்டதால், உலக உயிர்கள் அனைத்தும் வதைபட்டன. உலகம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது.

தன் விளையாட்டு வினையாகி விட்டதை உணர்ந்த பார்வதி தேவி, தன்னால் உலகம் சந்தித்த விளைவை எண்ணி வருந்தினார். தன் தவறுக்கு பரிகாரம் வேண்டினார். உடனே சிவபெருமான், “பார்வதி தேவியை பூலோகம் சென்று தவம் செய்” என்றார். அதை ஏற்று பூலோகம் வந்த பார்வதி,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் ஆற்றின் கரையிலிருந்த வில்வ மரத்தடியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டார். தேவியின் தவத்தில் மனம் குளிர்ந்த ஈசன், அவரைத் தேடிவந்து “பார்வதி” என்று அழைத்தார்.

சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், ஈசனின் குரல் பார்வதி தேவியின் மனதிற்குள் நுழையவில்லை. தன்னை அலட்சியம் செய்வதாக எண்ணிய இறைவன், பார்வதியின் தவத்தை கலைப்பதற்காக, தம் தலையில் இருந்த கங்கையை பாலாற்றில் விட்டார். இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவியின் தவம் கலைந்தது. வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க, அதை இறுக்கமாக தழுவியபடி இருந்தார், பார்வதி தேவி. மேலும் தனக்கு உதவும்படி தன் அண்ணனை அழைத்தார்.

தங்கையின் குரல் கேட்டு அங்கு வந்த பெருமாள், ஆற்றின் குறுக்காக சயனக் கோலத்தில் படுத்து, பாலாற்றை தெற்கு நோக்கி பாயச் செய்தார். அதன் பின் சிவ பூஜையை நிறைவு செய்தார் பார்வதி. இதையடுத்து பார்வதிக்கு காட்சி தந்து, அவரை அழைத்துக்கொண்டு கயிலை திரும்பினார் சிவபெருமான். ஜலந்தாசுரன் என்னும் அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே ஈசன், தன் விரலால் பூமியில் ஒரு வட்டமிட்டார். அது சக்கராயுதமாக மாறி, ஜலந்தாசுரனை அழித்து, மீண்டும் ஈசனிடம் வந்துசேர்ந்தது.

அந்த சமயத்தில் குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை உண்டானது. விஷ்ணு பக்தனான குபன், திருமாலிடம் முறையிட்டான். உடனே திருமால் தன்னிடம் உள்ள சக்கராயுதத்தை ஏவினார். அது ததீசி முனிவரின் வஜ்ர உடலை தாக்க முடியாமல் கூர்மழுங்கியது. இதையடுத்து சிவனிடம் உள்ள சக்கராயுதத்தை பெற திருமால் முடிவு செய்தார். அதன்படி உடல் முழுவதும் திருநீறு, ருத்ராட்சம் உள்ளிட்டவற்றை அணிந்து, பார்வதி வழிபட்ட மணல் லிங்கத்தில் பூஜை செய்து வழிபட்டார். மேலும் தினமும் ஆயிரம் தாமரை கொண்டு இறைவனை பூஜித்தார்.

ஒரு நாள் பூஜைக்கு ஒரு தாமரை குறைந்தது. இதையடுத்து  தன் கண்களில் ஒன்றை சிவனுக்கு அர்ப்பணித்தார் திருமால். சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து திருமால் முன்பாக காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தார். மேலும் அவருக்கு தேன் தாங்கிய தாமரைக் கண்களை வழங்கியதுடன், தன்னிடம் இருந்த சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருளினார். பார்வதி தேவி மணல் லிங்கம் அமைத்த இடம் தான் நெமிலி அடுத்த திருமால்பூரில் உள்ள அஞ்சனாட்சி சமேத மணிகண்டேஸ்வரர் கோயில். 1500 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்த தலத்தின் மூலவர் மணலால் ஆனவர்.

இது தீண்டாத் திருமேனி என்பதால், இவருக்கு புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. உற்சவ மூர்த்தியான, சிதம்பரரேஸ்வருக்குத்தான் அபிஷேகம் நடக்கிறது.மூலவருக்கு எதிரில் நந்தியம்பெருமான், அருகில் திருமால் கைகூப்பிய நிலை இருக்கிறார். உற்சவர் திருமாலின் கரத்தில் தாமரை மலரும், கண்ணும் உள்ளன. இத்தல இறைவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பாசப்பினைப்பில் இருந்து நீங்குவீர்கள். முக்தி நிலையை எட்டலாம்.

இத்தல இறைவியான அம்பாள், ‘அஞ்சனாட்சி’ என்ற திருநாமத்துடன், அஷ்டலட்சுமியோடு கூடிய பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு பவுர்ணமி தோறும் ஊஞ்சல் சேவை நடக்கிறது. மீன ராசிக்காரர்கள் இந்த அம்பாளை வழிபட்டு, சகல தோஷ நிவர்த்தி பெறலாம். இது சித்திரை நட்சத்திர தலமாகவும் திகழ்கிறது. இக்கோயில் சந்திரன் வழிபட்ட தலமாகும்.இறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து, நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது இங்குள்ள தரிசனமுறை.

சடாரி வைத்து, தீர்த்தம் தருவது இவ்வாலய சிறப்பு. திருமால் உண்டாக்கியதால் இங்குள்ள தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்தில் பதிகம் பாடியுள்ளனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

Tags : Goddess Parvati ,Tirumalpur ,Nemli ,village , Nemili: This place is called Thirumarperu because it is the place where Thirumal was born. That is what Tirumalpur was called in the days of Maruvi. Once
× RELATED புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் : பயணிகள் அவதி!!