×

தா.பழூர் ஒன்றியத்தில் சம்பா நெற்பயிர் அறுவடை துவங்கியது-கடமைக்கு செய்வதாக விவசாயிகள் வேதனை

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக அறுவடை தாமதமாக துவங்கியது.
தண்ணீர் சரியான பட்டத்திற்கு வந்ததால் விவசாயிகள் முனைப்புடன் விவசாயம் செய்தனர். தை மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் கதிர்கள் தொடர் மழையால் நீரில் மடிந்து பாதிப்புக்கு உள்ளாகின. இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

இருப்பினும் நெல் மணிகளை ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது சில நாட்களாக வெயில் அடித்து வருவதால் விதைத்த கடனுக்காக இயந்திரங்கள் மூலம் அறுவடையை துவங்கி உள்ளனர். இருப்பினும் இயந்திரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்வதால் சேற்றில் அறுவடை செய்ய கூடிய இயந்திரங்கள் வரவைத்து அறுவடை செய்து வருகின்றனர். இதானால் அந்த இயத்திங்களுக்கு வாடகை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,சோழமாதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளோம். 1009 என்ற நெல் ரகத்தை தேர்வு செய்து அதிகப்படியான சாகுபடி செய்த நிலையில், முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது. ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து சாகுபடி செய்த நிலையில், தொடர் மழையால் பாதிப்புக்குள்ளானது. இதுதொடர்பாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்குவதாக கூறி சென்றனர்.

ஒரு வார காலமாக வெயில் அடிப்பதால் மாடுகளுக்கு வைக்கோல் அல்லது வீட்டில் உணவுக்காவது நெல் மணிகள் இருக்குமா என அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்தபோது இயந்திரங்கள் சேற்றில் சிக்கி பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இதற்காக சேற்றில் அறுவடை செய்ய கூடிய இயந்திரங்களை வரவழைக்கப்பட்டு அதிக வாடகை கொடுத்து அறுவடை செய்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து ஏமாற்றம் மட்டும் மிஞ்சியது.

சென்ற ஆண்டு தமிழக அரசு 1009 நெல் ரகத்தை ஒரு கிலோ 18 ரூபாய் 50 காசுக்கு கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் நெல் விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் சாப்பாட்டுக்கான அரிசியும் , ஆடு மாடுகளுக்கான வைக்கோலும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

வயல்களில் அதிகப்படியான சேறு இருப்பதால் வைக்கோல்கள் வயலிலேயே நாசமாகி போகின்றன. தற்பொழுது இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் நெல்மணிகளை அரசு அந்தந்த பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்து ஈரப்பதம் அளவீடு செய்யாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் கிடைத்த கொஞ்ச நெல்மணிகளாவது நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றார்.

Tags : Dhaka-Farmers Union , Dhaka: Samba covers an area of over 5,000 acres in the golden irrigated areas of Dhaka Palur Union in Ariyalur District.
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.