×

கொரோனா அறிகுறி குறைந்ததால் மருத்துவமனையில் வைத்தே சசிகலா நாளை விடுதலை: கர்நாடக சிறை நிர்வாகம் முடிவு

பெங்களூரு: விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் குறைந்து வருவதால், நாளை அவர் விடுதலையாவது உறுதியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு சமீபத்தில் திடீரென்று ரத்த அழுத்தம், மூச்சு திணறல், சளி தொல்லை, தொடர் காய்ச்சலால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூருவில் விக்டோரியா அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேனில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. சிகிச்சைக்காக கொரோனா வார்டில் உள்ள ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சசிகலா கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் இந்த அறிக்கையால் சசிகலா நாளை விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரை விடுதலை செய்வதற்கான பணிகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டால் சசிகலா சிறைக்கு சென்று, அங்கிருந்து விடுதலையாவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் தான் மீதியுள்ளது. இதில் அவர் மருத்துவமனைக்கும் சிறைக்கும் செல்ல முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் அவரை மருத்துவமனையில் இருந்தே விடுதலை செய்த சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  தண்டனை கைதிகள் விடுதலையாகும்போது கையெழுத்திடும் சான்றிதழ்களை, மருத்துவமனைக்கே அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

சிறை காவலர்கள் அல்லது அதிகாரிகள் யாரேனும் விக்டோரியா மருத்துவமனைக்கு நாளை முறையான ஆவணங்களுடன் வந்து, அதில் கையெழுத்து வாங்கி செல்ல இருக்கிறார்கள். இதையடுத்து அன்றைய தினத்தில் இருந்து அவர் சிறை கைதி என்று இல்லாமல், சாதாரண நோயாளியாக கருதப்படுகிறார். மேலும் விக்டோரியா மருத்துவமனையும் அவரை டிஸ்ஜார்ஜ் செய்ய அனுமதி அளித்துவிடும். அதன் பின்னர் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனை அல்லது விக்டோரியா மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளித்து கொள்ளலாம். இதில் சிறை நிர்வாகம், மருத்துவமனை தலையீடு இருக்காது என்று கூறப்படுகிறது.

அதே நேரம் கொரோனா நோயாளி என்பதால், அவர் உடனடியாக தமிழகம் செல்ல முடியாது என்று கூறப்படுகிறது. மாறாக அவர் தனியார் மருத்துவமனை அல்லது வீட்டு தனிமையில் இருந்துவிட்டுதான் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் சசிகலா உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெங்களூருவிலேயே தங்கி ஓய்வோ அல்லது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவிட்டோ, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்திற்கு செல்ல இருப்பதாக உறவினர்கள் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உறவினர்கள் விரும்பினால்,  தனியார் மருத்துவமனையில் அவர்களே, சசிகலாவை சேர்த்து, முழு உடல் தகுதி பெறும்படி செய்து கொள்ளலாம். அது அவர்களுடைய விரும்பமாகி உள்ளது.

சர்க்கரை அளவு அதிகரிப்பு:
இதற்கிடையே, விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, மற்றும் டீன் ஜெயந்தி ஆகியோர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்,  ‘‘சசிகலாவுக்கு நாடி துடிப்பு நிமிடத்திற்கு 80 என்ற முறையிலும், ரத்த அழுத்தம் 130/80 எம்.எம் என்றும், சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. விரைவில் அவர் இயற்கையாக சுவாசிக்க தொடங்கிவிடுவார். அதே நேரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நேற்று பகலில் 157 எம்.ஜியாக குறைந்த நிலையில் நேற்று இரவு 256ஆக அதிகரித்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

வேலை செய்யவில்லை ஊதியம் இல்லை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா விவசாய பணியை தேர்வு செய்தார். அவர் எந்த வேலையும் செய்யாததால் சிறைக்கு அவர் மூலம் எந்தவிதமான ஆதாயமும் ஏற்படவில்லை. இதனால் சிறையில் இருந்து விடுதலையாகும் அவருக்கு, எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படாது என்று சிறை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

சிகிச்சை சரியில்லை
சசிகலாவின் ஆதரவாளரும், உயர் நீதிமன்ற வக்கீலுமான ராஜராஜன் என்பவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திற்கு அளித்துள்ள புகார் மனுவில், ‘‘பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. பவுரிங் மருத்துவமனையும் அவரது உடல் நிலையில் அக்கறைகாட்டவில்லை. விக்டோரியா மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. இதற்கு சிறை நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம். இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

டிடிவி. டிவிட்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில், நம் அனைவரின் எதிர்பார்ப்பின்படி சசிகலா  நாளை விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து,  உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ெதரிவித்துள்ளார்.


Tags : Sasikala ,hospital ,jail administration ,Karnataka , Keep in the hospital as the corona symptoms subside Sasikala to be released tomorrow: Karnataka jail administration decides
× RELATED சொல்லிட்டாங்க…